நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, ஜூலை 21, 2017

பரிமள யாமளை

இன்று மங்கலகரமான ஆடி வெள்ளி..

இன்றைய பதிவில்
அழகுக்கு அழகான அம்பிகையின் தரிசனம்..


உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற  மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமன்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே..(001)

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோம:அமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. (004)


ஸ்ரீ காந்திமதி - நெல்லை
சுந்தரி எந்தைத் துணைவி என்பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!.. (008)

நின்றும் இருந்தும் கிடந்தும்  நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே!..(010)

ஸ்ரீ உண்ணாமுலையாள் - அண்ணாமலை

ஸ்ரீ பிரகதாம்பாள் - புதுக்கோட்டை
கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது  உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவயத்து நான்முன் செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவிஏழையும்  பூத்தவளே!.. (012)

பூத்தவளே புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே நின்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!.. (013)

ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர்
தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும்  செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே!.. (015)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!.. (016)

பண்ணளிக்கும் சொல் 
பரிமள யாமளைப் பைங்கிளியே
நின் திருவடிகள் சரணம்.. சரணம்..


ஓம் சக்தி ஓம்..
***  

செவ்வாய், ஜூலை 18, 2017

திருப்பாதாளீச்சரம்

ஒரு சமயம் நான்முகனுக்கு திருப்பாற்கடலில் இருந்து அமுத மயமான நான்கு மாங்கனிகள் கிடைத்தன..

அவற்றை என்ன செய்வதென்று யோசித்தார்..

முடிவில் -

நான்கு மாங்கனிகளில் இரண்டினை ஆனைமுகனுக்கும் அறுமுகனுக்கும் வழங்கி மகிழ்ந்தார்..

மீதமுள்ள இரண்டு பழங்களையும் காஞ்சி மற்றும் திருப்பாதாளீஸ்வரம் ஆகிய தலங்களில் செய்த சிவபூஜையில் சமர்ப்பித்து வணங்கினார்...


அதனால்,

திருப்பாதாளீஸ்வரம் எனும் தலத்தில் ஈசன் எம்பெருமானுக்கு மாங்கனி நிவேதனம் செய்வதனால் தீராத வல்வினைகள் எல்லாம் தீர்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு..

இத்தலத்தில் அம்பிகைக்கு அமிர்த நாயகி என்பது திருப்பெயர்..

இங்கே சிவபூஜை செய்வதற்கு நாட்டம் கொண்ட ஆதிசேஷன் -
தனஞ்சயன் எனும் முனிவராக தவமிருந்து வழிபட்டபோது -

அவரது தவத்திற்கு இரங்கிய எம்பெருமான் -
பாதாளத்திலிருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டார்..

அதனால் -
திருப்பாதாளீஸ்வரம் என்பது திருப்பெயர்..

ஆனாலும்,
இன்றைக்கு இத்தலம் பாமணி என்றழைக்கப்படுகின்றது..

இத்திருத்தலம் எங்கே இருக்கின்றது?..

மன்னார்குடியில் இருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவில்..

திருப்பாதாளீச்சுரம்
- பாமணி -


இறைவன் - ஸ்ரீ நாகநாதர், திருப்பாதாளீஸ்வரர்,
அம்பிகை - ஸ்ரீ அமிர்த நாயகி..
தீர்த்தம் - நாக தீர்த்தம்
தல விருட்சம் - மா மரம்..

சுகல முனிவர் என்பவர் இத்திருவூரில் இருந்து தவம் புரிந்த வேளையில் அவருடைய பசு - மேய்ச்சல் நிலத்தில் ஒரு புற்றினைக் கண்டது..

உள்ளுணர்வினால் புற்று சிவலிங்க வடிவமாக இருப்பதைக் கண்டு தினமும் புற்றின் மீது பால் சொரியலாயிற்று..இதன் பிறகு பசுவின் மடியில் பால் குறைவதைக் கண்ட முனிவர் பசுவின் நடவடிக்கைகளைக் கவனித்தார்..

அப்பசு மேயும் பொழுது புற்றில் பால் பொழிவதையும் கண்டார்...

எல்லாவற்றையும் கடந்த முனிவர்..
ஆனாலும் ஆய்ந்து அறியாமல் சினங்கொண்டு -
புற்றினுள் பாலைச் சொரிந்த பசுவைப் பிரம்பால் அடித்து விட்டார்..

இதனால் மிகுந்த வேதனையடைந்த பசு -
புற்றின் மேல் மோதி தனது ஆற்றாமையைக் காட்டியது...

அங்கிருந்த குளத்தில் வீழ்ந்து தன்னுயிரைத் தியாகம் செய்தது..

அவ்வேளையில் - ஈசன் எம்பெருமான் விடை வாகனராக
அந்தப் பசுவிற்குக் காட்சி நல்கி மோட்சமளித்தார்..

பசு வழங்கும் கொடையாக
என்றென்றும் எப்போதும் பால், தயிர் மோர், வெண்ணெய், நெய் - எனும் ஐந்தையும் மங்களப் பொருட்களாக தேவரும் மனிதரும் போற்றி மகிழ்வர் என வரமளித்தார்..

மேலும் - அந்தப் பசுவின் வம்சமாக
மகிஷம், நந்தா, பத்ரா, சுமனா, சுபத்ரா -
எனும் இனங்கள் பல்கிப் பெருகவும் வரமளித்தார்..


பொதுவாக சுயம்பு லிங்கங்கள் புற்றுருவானவை..
நித்ய அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை..
விசேஷ காலம் எனில் கவசம் சாத்தி திருமுழுக்கு செய்விக்கப்படும்..

ஆனால் -
இத்திருத்தலத்தில் - சிவலிங்கத் திருமேனிக்கு வழக்கமான அபிஷேகங்கள்     கவசம் சாத்தப்படாமல் நிகழ்வுறுகின்றன..

அபிஷேக வேளையில் பசு முட்டியதால் ஏற்பட்ட பிளவினை சிவலிங்கத்தின் திருமேனியில் காணலாம்...

கடந்த ஞாயிறன்று (16/7) இத்திருத்தலத்தில் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்..

இதற்கு முன் பலமுறை இங்கே சென்றிருக்கின்றேன்..

ராகு கேது மற்றும் கால சர்ப்ப  தோஷ நிவிர்த்திக்கான பரிகார தலம் என்பதால் ஞாயிற்றுக் கிழமை மாலை  (4.30 - 6.00) ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நிகழ்வுறுகின்றன..

மகா மண்டபத்தினுள் தென்புறமாக அமைந்துள்ள ஆதிசேஷனுக்கு
சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நிகழ்கின்றன...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலா ரூபத்தின் முன்பாக நடைபெற்ற பரிகார பூஜைகள் - தற்போது முன் மண்டபத்தில் ஆதிசேஷனின் உற்சவ பஞ்சலோக திருமேனிக்கு நடைபெறுகின்றன..

திருக்கோயிலின் எதிரில் நாக தீர்த்தம்..

ராஜகோபுரம் இல்லை..தோரண வாயிலாக விளங்குகின்றது..

திருக்கோயிலில் தென்புறமாக சிறு கோயிலில் ஸ்ரீ காளியம்மன் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனள்..

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறமாக தல விருட்சமாகிய மாமரம்..

கொடி மரம்.. விமானத்துடன் கூடிய நந்தி மண்டபம்..

வட புறம் ஸ்ரீ அமிர்த நாயகி அம்பிகையின் சந்நிதி..
தனியாக திருச்சுற்றுடன் விளங்குகின்றது..

இந்த சுற்று மண்டபத்தின் சுவர்களில் தான்
தல புராண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன..

அம்பிகையை வலம் வந்து வணங்கிய பின் திருக்கோயில் தரிசனம்..

திருமூலத்தானத்தினுள் கருணையே வடிவாக எம்பெருமான்...
வெள்ளிக்கவசம் திருமேனியை அலங்கரிக்கின்றது...

பாசப் பழிகளைக் களையும் பரமன் சூழொளி விளக்கில் ஒளிர்கின்றான்..

பார்க்கப் பார்க்க பரவசம் மேலிடுகின்றது.. உள்ளம் புத்துணர்வு பெறுகின்றது..

சந்நிதியின் வலப்புறம் சோமாஸ்கந்த திருமேனி..
இடப்புறம் - சிவகாம சுந்தரியுடன் நடராஜப் பெருமான்...

தெற்குப் புறமாக ஒரு வாசலும் இருக்கின்றது..

இந்த வாசலின் அருகில் தான் ஆதிசேஷனின் திருமேனி...
எந்த வினையானாலும் வந்த வழி ஏகிட வேண்டும்.. - என, வேண்டிக் கொள்கின்றோம்..

திரும்பவும் அதிகார நந்திவை வலம் வந்தால்  -  தெற்குப் பிரகாரம்..

திருக்கோட்டத்தில்  அழகான நர்த்தன விநாயகர்..

அடுத்து சிங்கங்கள் தாங்குகின்ற மண்டபத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி..

கன்னி மூலையில் க்ஷேத்ர விநாயகர்..

அடுத்ததாக - திருமாளிகைப் பத்தியில் -
வள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி..

எதிரில் திருக்கோட்டத்தில் அண்ணாமலையார்..

முருகன் சந்நிதியை அடுத்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி சந்நிதி..
இங்கே ஸ்ரீ காளியும் ஸ்ரீ சரஸ்வதியும் ஒருங்கே உறைகின்றனர்..

திருக்கோயிலின் வாயு மூலையில் துளசி மாடம்...


வடக்குப் பிரகாரத்தின் திருக்கோட்டத்தில் ஸ்ரீ நான்முகன் ஸ்ரீ துர்கை..
ஸ்ரீ சண்டேசர் சந்நிதி..

திருமதிலின்  ஓரமாக அமிர்த கூபம் எனும் கிணறு..

ஈசான்யத்தில் மேற்கு முகமாக ஸ்ரீ பைரவ மூர்த்தி...

ஞாயிறன்று தேய்பிறை அஷ்டமி ஆனபடியால் ஸ்ரீ வயிரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றிருந்தன..

அருகில் நவக்கிரக மேடை..

அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் மாணிக்க வாசகருடன் சந்திரன்..
அந்தப் பக்கமாக சூரியன்...

மீளவும் - ஸ்ரீ நாகநாதர் தரிசனம்..
சொல்லொணாத அமைதி மனதில் ததும்புகின்றது..

மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது - திருக்கோயில்..

கடந்த ஏப்ரல் 2/ 2017 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது..

திருஞான சம்பந்தப்பெருமான் இத்தலத்திற்கு திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் தம் திருவாக்கில் வைப்புத் தலமாக விளங்குகின்றது..

திருக்கோயிலில் எடுக்கப்பட்ட படங்களுள் ஒரு சில படங்கள் மட்டுமே இன்றைய பதிவில்...

அடுத்தொரு பதிவு மேலும் சில தகவல்களுடன் தொடரும்..

திருப்பாதாளீச்சுரம் எனும் பாமணி மிகச் சிறிய கிராமம்..
கோயிலின் அருகில் தேநீர்க்கடைகள் கூடக் கிடையாது..

அர்ச்சனைப் பொருள்கள் கோயில் வளாகத்தில் கிடைக்கின்றன..

மன்னார்குடி  நகரப் பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கு  ஒரு முறை பேருந்துகள் இயங்குகின்றன..

விருப்பம் எனில் ஆட்டோவில் செல்லலாம்..

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்து பேருந்திற்காகக் காத்திருக்கும்போது
மீண்டும் இத்திருக்கோயிலுக்கு வரும் நாளை எண்ணுகின்றது - மனம்..


அங்கமும் நான்மறையும்  அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல் சூழ்ந்த பாதாளே!.. (1/108)
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

சனி, ஜூலை 15, 2017

என்றும் இமயம்

படிக்கக் கல்வி நிலையங்கள் வேண்டும்..

இது தான் முதல் நடவடிக்கை..


தான் பெறாத கல்வியை எனது மக்கள் பெற வேண்டும்.. அறியாமை எனும் இருள் அகல வேண்டும்.. வறுமை அதனால் நீங்க வேண்டும்...

இல்லாமை என்னும் இருளில் மக்கள் சிக்கிக் கிடக்கும்போது அறிவு ஒளியூட்டும் பள்ளிகளை மூடுவதா?..

எனும் உயரிய சிந்தனை மலர்ந்தது -
தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த ஏழைப்பங்காளரின் நெஞ்சில்..


அதன் விளைவாக -
அதற்கு முந்தைய ஆட்சியாளரால் இழுத்து மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளும் திறக்கப்பட்டன..

அவை போதாதென்று மேலும் பதினாலாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன..

முதல் திட்ட முடிவில் ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை - 21,500..

இரண்டாவது திட்ட காலத்தில் - 26,750..

வெகு விரைவில் முப்பதாயிரத்தையும் தாண்டியது..

ஆரம்பப் பள்ளிகளுக்கு வந்த மாணவர் தொகை முதல் திட்ட முடிவில் 25 லட்சம்..

இரண்டாவது திட்ட இறுதியில் 33.8 லட்சம்..

கல்வியின் சிறப்பை உணராத மக்கள் குழந்தைகள கல்லாத மூடராக்கி வரும் தீமைகளைக் கண்டு வெகுண்டார்.. கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார்..

பல்லாயிரக் கணக்கான பள்ளிகளின் மூலம் லட்சோப லட்சம் குழந்தைகளின் வாழ்வில் கல்வியறிவு எனும் ஒளியேற்றப்பட்டது..

இருந்தும் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவில்லையே!.. அது ஏன்?.. -  என, சிந்தித்த போது - மூலகாரணம் கண்டறியப்பட்டது..

அதற்கான பரிகாரமும் தேடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது..

ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் ஏழை எப்படித் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவான்?..

ஒரு வேளையாவது குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஆசை - தாய் தந்தையர்க்கு ஏற்படுமே - என்ற எண்ணத்தால் விளைந்ததே - மதிய உணவுத் திட்டம்..

மதிய உணவுத் திட்டம் மேலும் பல்லாயிரம் சிறார்கள் பள்ளிக்கு வருவதற்கான காரணமாக அமைந்தது..

பள்ளிகளைக் கட்டுவதும் ஆசிரியர்களை நியமிப்பதும்  பகல் உணவு  வழங்குவதும் ஏதோ சர்க்கார் செய்ய வேண்டிய வேலை.. அதில் நமக்கென்ன இருக்கின்றது!.. - என்ற மனநிலையில் இருந்த மக்களை -

கல்வி இயக்கத்துடன் இணைத்த பெருமையும் அவருக்கே உரியது..

தமிழகம் முழுவதும் பள்ளி வளர்ச்சிக்கென 133 மாநாடுகளை நடத்தி மக்களை கல்விப் பணியுடன் இணைத்ததால் கிடைத்த நன்கொடை 6. 47 கோடி..

அதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் சிலேட்டு முதலியன வழங்கப்பட்டன...

குழந்தைகளின் மனதில் ஏழை பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வு ஏற்படக்கூடாது.. இதைத் தடுக்க வேண்டும்!..

அந்த உயரிய சிந்தனையின் விளைவு தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு  சீருடை..

இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் வண்ண வண்ண சீருடைகளில் சிறகடித்து வலம் வருவதற்கு காமராஜர் அவர்களின் உயரிய எண்ணங்களே காரணம்..

1960 ஆம் ஆண்டில்வருடாந்திர வருமானம் ரூ 1200 எனில் அவர்தம் பிள்ளைகளுக்கு பதினொன்றாம் வகுப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்த காமராஜர் -

1962 - 63 ல் வருமான வரம்பினை 1500 என திருத்தினார்..

பலதரப்பட்ட மக்களுடன் அரசு பதிவு பெறா ஊழியர்களும் கடை நிலை ஊழியர்களும் பள்ளி இறுதி வகுப்பு வரை தம் பிள்ளைகளுக்கு கல்விச் சலுகை பெற்றனர்..

இதன் விளைவாக  உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருள் இலவசக் கல்வி பெறாமல் எஞ்சியுள்ளவர்கள் நூற்றுக்கு பதினேழு பேர் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டது..


காவிரி டெல்டா, கீழ் பவானி, மணிமுத்தாறு, வைகை, அமராவதி, சாத்தனூர், புள்ளம்பாடி, வீடூர், பரம்பிக்குளம், ஆளியாறு - எனும் நீர்ப்பாசனத் திட்டங்களால் விவசாயம் வளர்ச்சி கண்டது..

காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு 150 லட்சம் ஏக்கர்..

இதில் 56 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலையான பாசன வசதி பெற்றவை...

நெய்வேலி நிலக்கரி, அம்பத்தூர், ஆவடி, கிண்டி, திருவெறும்பூர், பொன்மலை - என தொழிற்பேட்டைகள்.. பற்பல தொழிற்சாலைகள்..

சென்னை துறைமுக மேம்பாடு மற்றும் அனல் முன்நிலையம், குந்தா நீர் மின் திட்டம்  - என,

தமிழகம் ஒளி மயமாகியது காமராஜர் ஆட்சியில்!..- புள்ளி விவரங்கள் -
திரு. முருக தனுஷ்கோடி அவர்களின்
காமராஜ் ஒரு சரித்திரம்
---

அப்படியிருந்தும் -
அந்த மாசற்ற மாணிக்கத்தையும் வீழ்த்தி
தன் முகத்தில் தானே கரியைப் பூசிக் கொண்டது - தமிழினம்!..

ஆனாலும் 
இமயம் என்றுமே இமயம் தான்!..

பெருந்தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க!.. 
***  

வியாழன், ஜூலை 13, 2017

திருவாதிரைக் களி 2

தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்திலும் 
மற்ற சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரையன்று
ஆருத்ரா  தரிசனம் மிகச் சிறப்பாக நிகழ்வுறும்.

சிதம்பரம் என்றால் என்ன பொருள்?..

சித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு. அம்பரம் - வெட்டவெளி. 


இங்கே வெட்ட வெளி என்பது எது?..

நடராஜர் சந்நிதியின் உள்ளே வலப்புறத்தில்  தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. 

பொதுவாகக் காண முடியாதபடி திரையினால்  மறைக்கப்பட்டிருக்கும். நடராஜருக்கு நிகழும் ஆராதனையின் போது திரை விலக்கப்பட்டு தங்க வில்வ மாலைக்கும் ஆரத்தி காட்டப்படும். 

அங்கே என்ன இருக்கிறது? என்று கவனித்தால், ஆகாயம் போன்ற சித்திரம் தான் தெரியும். 

இறைவன் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதையே இது குறிக்கிறது. 

எனவே  தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் ஆகின்றது...

வருடம் முழுதும் விசேஷங்கள் என்றாலும் ஆனித் திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் மிகச் சிறப்பானவை..

திருவாதிரை அன்று நடராஜருக்கு நைவேத்யம் களி. 
திருவாதிரைக் களி என்றே பிரசித்தம்...

ஏன்?.. என்ன காரணம்?..

வாருங்கள்.. தில்லை மூதூருக்குச் செல்வோம்..


தில்லையில் - சேந்தனார் என்னும் சிவ பக்தர் ...
யார் இவர்!?..

பூம்புகார் நகரில் வைரத் தூண் நட்டு வைத்து வாணிகம் செய்து வந்த திருவெண்காடரின் கணக்கர்..

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!..  - எனும் சொல்லால் எல்லாவற்றையும் ஒரு நொடியில் துறந்தார் திருவெண்காடர்...

இவருடைய துறவு கண்டு  இவரைப் பட்டினத்தார் - என்றழைத்தனர் மக்கள்..

தனது முதலாளி துறவு கொண்டபின் தன் நிலையையும் மாற்றிக் கொண்டார் - சேந்தனார்...

தாமும் சிவனடியார் ஆனார்..

தினமும்  எவருக்காவது உணவளித்த  பிறகே, தான் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டார்..

வயிற்றுப்பாட்டிற்காக - வனங்களில்  பட்டுப் போன மரங்களை மட்டும் -  வெட்டி, விறகாக்கி விற்றார்.. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தாமும் உண்டு எளியவர்க்கும் உணவளித்தார்.. 

ஏழை என்றான பின்னும்  அடியார்களை வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை...

இவ்வேளையில் தான் -

சேந்தனாரின் விருந்தோம்பல் பண்பினை பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன்,  திருவுள்ளம் கொண்டார். 

அப்போது தில்லையில் மார்கழித் திருவிழா நடந்து கொண்டிருந்தது..

காலமல்லாத காலமாக மழையும் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது

திருவிழாவினைக் காண வேண்டி சோழ மன்னர் கண்டராதித்தரும்   தஞ்சையம்பதியில் இருந்து தில்லைத் திருச்சிற்றம்பலத்திருக்கு வந்திருக்கின்றார்... 


தில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைக் கண்ணாரத் தரிசனம் செய்த பின் அரச மாளிகைக்குத் திரும்பினார் - கண்டராத்தித்தர்..

முன்னிரவுப் போதில் மீண்டும் தமது மாளிகையில் சிவ வழிபாடு நிகழ்த்தினார்..

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ!..

மனமுருகிப் பாடிய கண்டராதித்த சோழர் - 
எதற்காகவோ உற்று கவனித்தார்..

என்றைக்கும் கேட்கும் தண்டையொலி இன்றைக்குக் கேட்கவில்லை..

யாருடைய தண்டையொலி?.. ஈசனின் தண்டையொலி!..

கண்டராதித்தர் வழிபாட்டினை முடித்ததும் ஈசனின் தண்டையொலி கேட்கும் படியான வரத்தைப் பெற்றிருந்தார்..

ஈசனின் தண்டையொலியைக் கேட்காததால் மனம் கலங்கியது..
அந்த நிலையிலேயே உறங்கச் சென்றார்..

தில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவர் பராந்தக சக்ரவர்த்தி..
இவருடைய புதல்வர் மூவருள் நடுவானவர் கண்டராதித்தர்(950 - 957).. 

மூத்தவர் ராஜாதித்த சோழர்..
இளையவர் அரிஞ்சய சோழர்..


கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவ பக்தர்.. 
அரச மாளிகையை விட அரன் கோயிலையே மனதார விரும்பியவர்..

இவரது துணைவியார் மாதரசி செம்பியன் மாதேவியார்..

கண்டராதித்தரின் தம்பியாகிய அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழன்..

சுந்தர சோழரின் மக்களே - ஆதித்த கரிகாலன்.. குந்தவை நாச்சியார்...
அருள்மொழி வர்மன் எனப் பெயர் கொண்ட ராஜராஜ சோழன்..

இந்த வகையில் கண்டராதித்தர் -   
ராஜராஜ சோழனின் பெரிய பாட்டானார் ஆவார்..

அன்று திருவாதிரைக்கு முதல் நாள்.. கடுமையான மழை. 

சேந்தனாருக்கு  விறகு விற்று, பொருளீட்டி அடியாருக்கு உணவு அளிக்க முடியாத நிலை. வீட்டிலும் வெளியில் சொல்ல முடியாத நிலை. தவித்தார்.  தத்தளித்தார். 

தவறி விடுமோ அடியவரை உபசரிப்பது?.. என்று , தணலில் விழுந்த புழுவாய்த் துடித்தார்.

இரவாயிற்று.. ஏதும் இயலாதவராய் முடங்கிக் கிடந்தார். 
திடீரென குடிசையின் வாசலில் - திருச்சிற்றம்பலம்!... என்ற குரல்...

எழுந்து வெளியே வந்தவர் மழைத் தூறலில் வயதான சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டார். 

அன்புடன் வரவேற்று குடிசையின் உள்ளே உணவருந்த வருமாறு அழைத்தார். 

சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை. இருப்பினும் சேந்தனாரின் மனைவி  கொடி அடுப்பில் தீ மூட்டி  ஒருபுறத்தில் தண்ணீரை ஏற்றினாள்..

குடிசையின் மூலையில் இருந்த பானைகளைத் துழாவினாள்...

இரு கையளவு பச்சரிசிக் குறுநொய்யும் சிறிதளவு பயற்றம் பருப்பும் கொஞ்சம் வெல்லமும் கிடைத்தன..

இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது?.. - என்று யோசித்தாள் அந்தப் புண்ணியவதி..

கொடி அடுப்பின் மறுபுறம் பழஞ் சட்டியை வைத்து அரிசியையும் பருப்பையும் சற்றே வறுத்து பொடியாக நுணுக்கினாள்..

அதற்குள் தண்ணீர்  கல... கல... என்று கொதித்திருக்க
அரிசி பருப்புப் பொடியைப் போட்டு கிளறினாள்.. 
வெந்து வரும் வேளையில் வெல்லத்தையும் போட்டு மேலும் கிளறினாள்..

பாத்திரத்தில் தள... தள.. என்று நிறைந்து வந்தது.. மனம் போல!..

இதற்கிடையில் -
இந்த இரவிலும் தன்னைத் தேடி ஒரு அடியார் வந்திருப்பது குறித்து சேந்தனாருக்கு பெரு மகிழ்ச்சி. 

அடியாருக்கோ - சேந்தனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் -

இந்த இரவுப் பொழுதிலும் நமக்கு சமைத்துப் போட ஒருவன் இருக்கின்றானே!.. - என்று....

அன்றைக்கும் இப்படித்தான் -
மழை பெய்யும் இரவில் சுடச்சுட  - இளையான்குடியில் சாப்பிட்டது. 

அதன் பிறகு - செங்காட்டங்குடியில் கேட்டு வாங்கி சாப்பிட்டது  - இன்று வரைக்கும் பிரச்னையாகி விட்டது... ம்ஹும்.. இனி அந்த வேலை வேண்டாம்..

மதுரையில் வந்தியிடம் உதிர்ந்த பிட்டு  வாங்கித் தின்றதற்கு 
உழைத்துக் கொடுத்து முதுகில் அடியும் வாங்கியாகி விட்டது.. 
ஏனென்று யாரும் கேட்கவில்லை!..

அரிவாள் தாயனிடம் செங்கீரைச் சோறும் மாவடுவும்.... 

காரைக்காலில் புனிதவதி கையால் மாம்பழத்துடன் தயிர் சோறு..
ஆகா... அருமையான உபசரிப்பு... ஆனால், அவள் பேயாகிப் போனாள்!.. 

காளத்தி மலையில் மட்டும் என்ன சாதாரண கவனிப்பா!... 
கண்ணுக்குள்ளேயே நிற்கின்றான் கண்ணப்பன்!.... 

சோமாசி யாகம் என்று கூப்பிட்டான்.. 
சரி.. கூப்பிட்டானே.... என்று குடும்பத்தோடு போனால்.... 
இருந்தவன் எல்லாம் எழுந்தோடிப் போனான்!.. 


சிவனே!.. - என்று இருந்த இடத்தில் இருந்ததற்கு....
விஷத்தை அல்லவா  கொண்டு வந்து கொடுத்தார்கள்!.. 
அன்றைக்கு அவள்  அபிராமவல்லி மட்டும்  பக்கத்தில் இல்லை என்றால்?.... 

ஏதோ... இந்தக்  காலத்தில் சேந்தன் மாதிரியும்... சில பேர்!...

சிந்தனையில் சற்றே கண்ணயர்ந்த பெரியவரை எழுப்பினார் சேந்தன்....

ஐயா.. உணவருந்த வாருங்கள்!..

ஆவியுடனும் அன்புடனும் அடியவர்க்கு இலையில் பரிமாறப்பட்டது களி..... 

பெரியவர்  ஆனந்தமாக உண்டார்... 
முகக் குறிப்பை அறிந்து மறுபடியும், களிப்புடன்  பரிமாறினர் - களியை...

போதும் என்று தோன்றியது பெரியவருக்கு.... இலையை விட்டு எழுந்தார்... 

சேந்தனார் கேட்டார் -  ஐயா.. இன்னும் கொஞ்சம் உண்ணலாமே!..

அப்படியா!.. இன்னும் இருக்கிறதா?.. சரி... அதையும் கொண்டு வா!... 

களியைக் கேட்டு வாங்கி,  இடுப்புத் துணியில் முடிந்து கொண்டார்... 

மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தினார்.. திருநீறு வழங்கி விட்டு புறப்பட்டார்.. 

சேந்தனார்க்கும் அவருடைய மனைவிக்கும் மிக மிக திருப்தி...

எதுவும் சாப்பிடாமலேயே - ஓலைப் பாயை விரித்து அந்த ஏழையர் நிம்மதியாக உறங்கினர்.. 

அதே இரவில் தான் - கண்டராதித்த சோழர் 
ஈசனின் தண்டை ஒலி - கேட்காததைக் குறித்து  நிம்மதியிழந்தவராக
பஞ்சணையில் புரண்டு கொண்டிருந்தார் - தூக்கமின்றி!..

விடிந்த பொழுதில்,  கோயிலைத் திறந்த  தில்லைவாழ் அந்தணர்கள் 
ஈசனின் பட்டாடையிலும் அம்பலத்திலும்  களியின் துணுக்குகளைக் கண்ணுற்றனர். அதிர்ந்தனர்...

மன்னனிடம் ஒடோடிச் சென்று தகவல் அறிவித்தனர்.. 
மன்னர் மேலும் குழம்பினார். 

ஆனாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளைத் தொடர உத்தரவிட்டார். 
தில்லை அம்பலம் திருவிழாக்கோலம் பூண்டது.

எல்லோருக்கும் விடிந்த பொழுது சேந்தனாருக்கும் விடிந்தது... 
அவர் மனைவியுடன் ஆதிரைத் திருநாள் காண சென்றார். 

அங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது 
நின்று கொண்டிருந்தது...

ஆனையும் சேனையும் திருத்தேரை இழுக்க முயன்று தோற்றுப் போனதாக மக்கள் பேசிக் கொண்டனர்..

என்ன பெருங்குற்றம்  நேர்ந்ததோ?.. - என்று எல்லோரும்  அஞ்சி நின்றனர்.. அவ்வேளையில்,

சேந்தனே!.. தேர் நகர்வதற்குப் பல்லாண்டு பாடுக!..  

- என,  இறை வாக்கு வானில் ஒலித்தது...

அதைக் கேட்டு ஊரெல்லாம் திகைத்து நிற்க - சேந்தனார், 

ஐயனே!.. ஏதும் அறியாத மூடன்.. எங்ஙனம் பாடுவேன்?.. - மனம் உருகினார்..

ஆகும்.. உன்னால் ஆகும்.. களி படைத்துக் களிப்படைந்தவன் அல்லவா!.. பாடுக!.. - என வாழ்த்தினான் பரமன்..

யார் இந்தப் புண்ணியர்?.. - என்று ஊரெல்லாம் உற்று நோக்கியது..

சேந்தனார், பெருந்தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டார்..

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே!..

ஆனந்தக் கண்ணீர் வழிய பல்லாண்டு பாடினார் - சேந்தனார்..

ஓடாது நின்ற பெருந்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருளத் தொடங்கின. 

மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது... 


விடை வாகனத்தில் உமையாம்பிகையுடன் தோன்றிய மகேசன் அறிவித்தான்...

நேற்றிரவு சேந்தனின் குடிசைக்குச் சென்றிருந்தோம்.. அங்கே விருப்புடன் களி உண்டோம்.. அதனாலேயே - கண்டராதித்தனின் வழிபாட்டில் தண்டை ஒலி கேட்கவில்லை!..

சேந்தனாரும் அவர் மனைவியும் வானிலிருந்து பெய்த பூமழையில் குளிர்ந்தார்கள்...

மன்னவரும் மறையவரும் மற்றவரும் - களி உண்டு களிநடம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை அறிந்தார்கள்...

சேந்தனாரையும் அவரது மனைவியையும்  பணிந்து வணங்கினார்கள்... போற்றி மகிழ்ந்தார்கள்...

அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது...

கண்டராதித்தர் பாடிய கோயில் திருப்பதிகமும்
சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் 
ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்று விளங்குகின்றன...

இருப்பவர் தம் மாளிகையை விடவும்
இல்லாதோர் இல்லங்களே இறைவனுக்கு உகப்பு..

பொன் பொதிந்த கோட்டங்களை விடவும்
அன்பு நிறைந்த நெஞ்சங்களே ஐயனுக்குத் தித்திப்பு..


அவர் தரும் அடிசில் அமுதினும் தித்திப்பு..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

புதன், ஜூலை 12, 2017

திருவாதிரைக் களி 1

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. இது? .. தக்காளி கிலோ எழுபது ரூபாய் சொல்றாங்க.. எதுவும் வாங்க முடியாதபடிக்கு விலை எல்லாம் ஏறிப் போய்க் கிடக்கு!...

ஆமா.. ரெண்டு மூணு மாசமா இப்படித் தான் இருக்கு..  மழை இல்லை.. சரியா விளைச்சலும் இல்லை.. என்னதான் செய்யமுடியும்.. பாவப்பட்ட ஜனங்களுக்கு பரிதவிப்பு தான் மிச்சம்!...ஆனாலும் நாக்கு கேக்க மாட்டேங்குதே!.. மாமாவுக்கு தக்காளி சட்னி இல்லை..ன்னா இட்லி இறங்காது.. தக்காளி  ரசம் இல்லை..ன்னா அத்தை தவிச்சுப் போயிடுவாங்க!..

இங்கேயும் அப்படித்தான்..  அத்தானுக்கு யோகா முடிச்சதும் தக்காளி ஜூஸ் குடிச்சாத் தான் நிம்மதி..

இதெல்லாம் பிரச்னையே இல்லை.. விலைதான்.. அதிலயும் பாருங்க.. நல்ல பழமா பொறுக்கி எடுக்க விட மாட்டேங்கிறான்... இப்போ வாங்கின ஒரு கிலோவில நாலு பழம் நல்லதா இல்லை.. கேட்டா இஷ்டம்...னா வாங்குங்க.. - அப்படி..ன்னு எகத்தாளம்...

அதுக்குத் தான் சொன்னாங்க.. நாக்கை அடக்குங்க... ந்னு.. இல்லை..ன்னா வீட்டுத் தோட்டம் போட்டுட வேண்டியது தான்.. ஓரளவுக்கு சமாளிக்கலாம்...

அதுக்கெல்லாம் உடம்பும் வளையணுமே!..

நல்லது வேணும்..ன்னா வளைஞ்சு தான் ஆகணும்.. அத்தான் போன மாசம் பட்டுக்கோட்டை போயிருந்தப்ப அங்கேயிருந்து கீரை, கத்தரி, தக்காளி விதையெல்லாம் வாங்கிக்கிட்டு வந்தாங்க... கொல்லைப் பக்கம் போட்டுருக்கேன்..

சொல்லவேயில்லை.. அக்கா!..நல்லா தழைச்சிருக்கு... இன்னும் நாலு நாளை..ல தக்காளி பழுத்திடும்... பழுத்ததும் கொடுத்து விடலாம்..ன்னு இருந்தேன்...

நாம பார்த்து பார்த்து வளர்க்கிறது தனி சந்தோஷம்.. இல்லையா அக்கா!..

ஆமாம் தாமரை.. ஏற்கனவே கொத்தமல்லி, புதினா கறிவேப்பிலை எல்லாம் தோட்டத்தில இருந்து தான்..

அது தான் தெரியுமே!... ஆனாலும் இந்தத் தக்காளி தான்...

தக்காளியைக் குறைச்சுக்கலாமே.... கொத்தமல்லி புதினா  இதெல்லாம் சட்னிக்கும் ரசத்துக்கும் ஆகி வராதா?..

அப்போ..  தக்காளிப் பழம் வேண்டாமா!?..

குறைச்சுக்கலாம்.. புளி, எலுமிச்சம்பழம் இதெல்லாம் தக்காளியை விட மலிவு தானே..

உள்ளது.. உள்ளது.. நீங்க சொல்றது சரிதான் அக்கா!..

இப்படித்தான் சமையல் குறிப்பு..ன்னு அதையும் இதையும் கலந்து கட்டி அடிச்சி விடுறாங்க... அதுக்கு இதைப் போடணுமா.. இதுக்கு அதைப் போடணுமா..ன்னு - படிக்கிறவங்களும் கேக்கிறவங்களும் தலையப் பிச்சுக்கிறாங்க...

அக்கா.. உங்களை ஒன்னு கேட்கலாமா!..

கேளேன்.. தாமரை!..

களி செய்யத் தெரியுமா?..

ஓ!.. உளுத்தங்களி, கம்பங்களி, கேப்பைக்களி, சோளக் களி...

திருவாதிரைக் களி!?..

என்னம்மா.. திடீர்... ந்னு சந்தேகம்!..

சொல்லுங்களேன்!...

தெரியுமே!..

சொல்லுங்க.. அக்கா.. திருவாதிரைக்களி எப்படி செய்றது..ன்னு சொல்லுங்க அக்கா!..

கால் கிலோ பச்சரிசிக்கு  கால் கிலோ வெல்லம்.. உள்ளங்கையளவு பயத்தம் பருப்பு.. கொஞ்சம் போல  தேங்காய்ப்பூ. கொஞ்சம் நெய்.. அஞ்சாறு முந்திரிப்பருப்பு ரெண்டு ஏலக்காய்.. அவ்வளவு தான்..

அரிசியையும் பருப்பையும் நல்லா  கழுவி விட்டு நிழல்ல உலர்த்தி தனித்தனியா வறுக்கணும்.. ஓரளவுக்கு சிவந்தால் போதும்..

அரிசியும் பருப்பும் ஆறினதும் திருகல்..ல்ல போட்டு பூ நொய் பதத்துக்கு உடைச்சுக்கணும்..

அதென்ன பூ நொய்!..

குறு நொய்க்கு அடுத்த பக்குவம்.. கிட்டத்தட்ட ரவை மாதிரி...

நெல்லோட உமி இல்லாம முழுசா இருந்தா அரிசி..
அரிசி ரெண்டா உடைஞ்சா நொய்..
நாலா உடைஞ்சா குறு நொய்..
எட்டா உடைஞ்சா பூ நொய்!..

யப்பா!.. இத்தனை அர்த்தம் இருக்கா!..

ஏலக்காயை  தட்டிக்கணும்.. முந்திரியை பக்குவமா வறுத்துக்கிடணும்..

வெல்லத்தை ரெண்டே கால் குவளை  தண்ணீரில் கொஞ்ச  நேரம் கொதிக்க வைக்கணும்.. கொதிக்கறப்போ - வெல்லத்தோட கசடு வந்தா எடுத்துப் போட்டுட்டு  உடைச்ச அரிசி பருப்பு இதெல்லாம் போட்டு கட்டிப் பிடிக்காம கிளறணும்..

முக்கால் பங்கு வேக்காடு ஆகி - தள தள..ன்னு வரும்..
அப்போ  தேங்காய்ப்பூ நெய் முந்திரி ஏலக்காய்
இதெல்லாம் போட்டு நல்லா கிளறி இறக்கி வைக்க வேண்டியது தான்..

என்னக்கா.. இப்படிச் சொல்லிட்டீங்க!.. பச்சரிசியும் பாசிப் பருப்பும் வெல்லமும் சேர்த்துப் பண்ணினா சர்க்கரைப் பொங்கல் ஆகிவிடாதோ!?..

ஆகிடும் தான்!..
குழைஞ்சு இறுகினா சர்க்கரைப் பொங்கல்..
தள.. தள..ன்னு நெகிழ்ந்தா பச்சரிசி பாயசம்!..
கொஞ்சம் கவனமாத் தான் செய்யணும்...

அக்கா.. இதுல கடலைப் பருப்பு இது மாதிரியெல்லாம் போடலாம்..ன்னு செல்றாங்களே!..

அம்மாடி.. தாமரை!.. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பக்குவம் இருக்கு... சமையல் விஷயத்துல மட்டும் இது தான் அது!.. -ன்னு நிலை நிறுத்திட முடியாது...

ஓ!.. இப்போ புரியுது.. அக்கா!..

ஆமாம்.. உனக்கென்ன இப்போது திடீர் சந்தேகம்!...

திங்கக்கிழமை திருவாதிரைக் களி.. அப்படி..ன்னு ஒரு பதிவு.. எங்கள் பிளாக்..ல.. நெல்லைத் தமிழன் எழுதியிருந்தாங்க.. அதைப் படிச்சிட்டு தான் உங்களைக் கேட்டேன்...

ஓஹோ!.. சரி.. முதன்முதலா இந்தக் களியை செஞ்சது யாரு..ன்னு தெரியுமா?..

தெரியாது..

சாப்பிட்டது யாரு..ன்னு தெரியுமா?..

அதுவுந் தெரியாதே!..

காவிரிப் பூம்பட்டினத்தில வைரத் தூண் நட்டு வைத்து வணிகம் செய்தவர் திருவெண்காடர்.. அவருக்கும் ஞானம் வந்தது.. போடா.. சரிதான்!.. -ன்னு எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு துறவியாயிட்டார்..

வைரத் தூணையும் தூக்கி எறிஞ்சிட்டா!?..

ஆமாம்!.. அவர் தான் பட்டினத்தார்.. அவரோட கணக்கப்பிள்ளை சேந்தனார்.. தன்னோட முதலாளி சிவனடியாராகப் போனதும் இவரும் சிவனடியார்களுக்கு அடியாராக ஆகிட்டார்.. சேந்தனாரோட மனைவியார் தான் முதன்முதலா திருவாதிரைக் களி செய்தவர்...

அப்போ.. முதன்முதலா சாப்பிட்டவர்!?..வேற யாரு!.. ஈசன் எம்பெருமான் தான்!..

ஓ.. திருவாதிரைக் களி.. இதுக்குள்ளே இத்தனை கதை இருக்குதா!.. சொல்லுங்களேன் அக்கா!...

அதை சொல்றதுக்கு முன்னால - 
இறைவன் இந்த களியை உண்ணும் போது
அதில் கடலைப்பருப்போ துவரம்பருப்போ முந்திரியோ 
ஏன் - நெய் கூட சேர்ந்திருக்கவில்லை!..

பின்னே!?..

அன்புதான்.. அன்பு மட்டுமே அதில் சேர்ந்திருந்தது..
அன்பு தான் திருவாதிரைக் களிக்குக் கூட்டு!..

சரியாகச் சொன்னீர்கள்.. அக்கா!.. சரி நான் புறப்படுகின்றேன்..
நாளைக்கு மீண்டும் வருகின்றேன்.. கதை கேட்க வேண்டும்...

தாமரை.. காபியை மறந்து விட்டுப் போகலாமா!..

அக்கா.. அக்கா!...


வாழ்க நலம்..
* * *

திங்கள், ஜூலை 10, 2017

அங்கும் இங்கும்

கடந்த வியாழனன்று திருமயிலை தரிசனம்..

அன்றைக்குப் பிரதோஷம்.. எனவே திருக்கோயிலினுள் மக்கள் வெள்ளம்..

அங்கே எடுக்கப்பட்ட சில படங்கள்..திருமயிலை தரிசனம் முடிந்தபின் அருகிலிருக்கும்அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில்..

முண்டகம் எனில் தாமரை..
அன்னையில் விழிகள் தாமரைப் பூக்களை நிகர்த்தவை....

எனவே - முண்டகக்கண்ணி... தாமரை விழியாள்..
திருக்கோயிலை மிகவும் சுத்தமாக பராமரிக்கின்றார்கள்.. பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கின்றது..

தீர்த்தமும் திருச்சாம்பலும் வழங்கி அருளிய முண்டகக்கண்ணியம்மன்
உண்டு மகிழ்வதற்கு அன்னமும் பாலித்தாள்..


அன்னையின் விதானம்


கோடி கோடியாய் நலங்களை வாரி வழங்கியருளும்
முண்டகக்கண்ணி அம்மனுக்கு இங்கே ஓலைக் கூரையே விதானம்...

தொடர்ந்து -
அருள்மிகு கோலவிழி பத்ரகாளியம்மன் திருக்கோயில்..
இங்கும் தூய்மை அழகு ஆகியன பிரகாசித்தன..

திருக்கோயிலினுள் நுழைந்ததுமே - சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்..

அம்பிகைக்கு நிவேதனம் ஆகிய பொங்கல்..

உயிரினுள் கலந்து பரவியது - பொங்கலின் சுவை..


சென்னையில் சில தினங்கள் மட்டுமே..

அங்கே கண்ட காட்சிகள்..

எந்தக் கோணத்தில் இருந்து கொண்டு அவற்றைப் பற்றிச் சொல்வது!?..

வெயில் என்றாலும் மழை என்றாலும்
ஆயிரம் சிறகுகளுடன் அவரவரும் பறந்து கொண்டிருக்கின்றார்கள்..

இயந்திர வாழ்க்கை என்பார்கள்..

இயந்திரமும் நாமும் ஒன்றா!..

ஆனாலும்
இயந்திரமும் தோற்றுப் போகும்..

எதையெல்லாம் அடைந்திருக்கின்றார்கள்?..
அதற்கு விலையாக எதையெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள்?..

சென்னையிலிருந்த போது
வியாழக்கிழமை முன்னிரவுப் பொழுதில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது..

அதற்குப் பின் வெகு நேரத்திற்கு ஒவ்வொரு வீட்டிலும் முடங்கிப் போனது இயல்பு நிலை..

ஆனாலும் -

நாளைக் காலையில் சீக்கிரம் எழவேண்டும்.. என்ற சிந்தனையுடன்
அன்றைய பொழுது கடந்து செல்கின்றது...

மீண்டும் இனிய உதயம்..
சென்னைக்கு வாழ்த்து சொல்லியபடி
நமது பயணம் தஞ்சையை நோக்கித் தொடர்ந்தது..

வாழ்க நலம்!..
***

திங்கள், ஜூலை 03, 2017

அன்பின் ஒளி

உலகம் சிவமயம்

ஸ்ரீ ஞான விநாயகர் துணை


ஜூலை முதல் தேதியன்று அபுதாபிக்கு வந்ததிலிருந்து
மருமகன், மகள், செல்லக்கிளியாய் பேத்தி
இவர்களுடன் மகிழ்ச்சியாய் மணித் துளிகள்..

என்ன ஒரு குறையென்றால்
அன்பின் கில்லர் ஜி அவர்களும்
அன்பின் குமார் அவர்களும் தற்சமயம் இங்கில்லாதது தான்!..

சென்ற ஆண்டிற்கு முந்தைய வருடம்
அவர்களுடன் கழித்த மாலைப் பொழுது மனதில் ஊடாடுகின்றது..

இதற்கிடையே -
நேற்று இரவில் புதிதாய் புத்தம் புதிதாய் ஒரு வரவு...

அபுதாபி மாநகரில் மடி கணினி ஒன்றினை வாங்கினோம்..

அதிலிருந்து வெளியாகும் முதல் பதிவு - இது!..

முதல் எழுத்தாக உகரம்..

தமிழின் ஐந்தாவது எழுத்து..

இதனைப் பிள்ளையார் சுழி என்பர்..

ஆனால் ஆன்றோர் தரும் விளக்கம் வேறு..

’’ உ’’ எனும் எழுத்து உலகைக் குறிப்பது..

உலகம் என்பதன் மறுவடிவம் சிவம்..

அதனாலேயே, உலகம் சிவமயம் எனச் சொல்வர்..

எண்ணியலில் (Numerology)  இலக்கம் ஐந்தின் சிறப்பு செம்மையாகச் சொல்லப்பட்டிருக்கும்..

மிகுந்த பெருமைக்குரிய எண் ஐந்து..

ஒன்று முதல் ஒன்பது வரையிலான இலக்கங்களுள் நடுவாக இருப்பது ஐந்து..

ஐந்திற்கு முன்னும் பின்னுமாக நான்கு இலக்கங்கள்..

விநாயகருக்கும் சிவபெருமானுக்கும் ஐந்தின் அடையாளங்கள் உரியன..

ஈசன் எம்பெருமானை -
நாயகன்.. நடு நாயகன்.. நடு ஆனவன்..
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன் என்றெல்லாம் சொல்வர்..

முன் - நடு - பின் - என்பதே மிகப் பெரிய விஷயம்...

சபை ஒன்றின் நடு வீற்றிருத்தல் என்பது ஒருவர்க்கு பெரும்பேறு...

ஆருருவாய என் ஆரமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளே!..

- என்றுரைப்பார் மாணிக்கவாசகப் பெருமான்..

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணியவள் அபிராமி!.. - என்கின்றார் அபிராமிபட்டர்..

அந்த நிலையைத் தரவல்லன- அறிவும் ஞானமும்..

எங்கும் எதிலும் நடு நிலை காத்தல் மாண்பாகும்..

நடுநிலை தவறுதல் மிகப் பெரும் பாவம் என்று சொல்லி வைத்தனர்..

நீதி மன்றத்தில் நடு இருக்காமல் ஓரம் சொன்னவர்க்கு ஏற்படும் கதியை ஔவையார் எடுத்துரைக்கின்றார்..

நடு!.. - என்று, விதை ஒன்றினை விதைப்பதையும் கூறும் தமிழுலகம்..

நடு என்பதைக் குறித்து மேலும் மேலும் விவரிக்கலாம்..

அவற்றை மறை பொருளாகக் குறிப்பதே உகரம்..

அந்த உகரம் தமிழில் ஐந்தாவது எழுத்து என்பது சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பு..

உயிர், உடல், உறவு,
உள்ளம், உணர்வு, உவப்பு,
உணவு, உடை, உறையுள் -

எனும் பொருள் மிகுந்த சொற்கள் - செந்தமிழுக்கே  உரிய சிறப்பு..

எத்தனையோ சிறப்புடைய தமிழின் மற்றுமொரு சிறப்பு எண்ணலங்காரம்..

அப்பர் பெருமான் திங்களூரில் விடம் தீர்த்தருளிய திருப்பதிகம் - எண்ணலங்காரத் திருப்பதிகம் ஆகும்..

ஞான சம்பந்த மூர்த்தியும் எண்ணலங்காரத் திருப்பதிகம் அருளியுள்ளார்..


புதிதாக தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினாலும்
புதிதாக கணினி வடிவமைத்தாலும் -
அதில் முதலில் திரையிட்டுப் பார்க்கும் திரைப்படம் - திருவிளையாடல்...

காலத்தால் மறக்க முடியாத திரைப்படம் திருவிளையாடல்..

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் எண்ணலங்காரம் கொண்டு
கன்னித் தமிழுக்கு சிறப்பு செய்த பாடல் இன்றைய பதிவில்...

எழுத்துருக்கள் இன்னும் சரியாக புதிய கணினியில் பொருந்தவில்லை போன்றதொரு நினைப்பு...

பதிவைக் காணும் போது குறையேதும் தென்பட்டால் குறிப்பிடவும்..

வரும்நாட்களில் சரி செய்து விடலாம்..

video

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்..
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்..

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்..
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்..

பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்..

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்..
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்..

காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும்
நிலையான ஊற்றாகி நின்றானவன்

அன்பின் ஒளியாகி
நின்றான் அவன்!..

அன்பின் ஒளியாகிய எம்பெருமான் 
எல்லா உயிர்களும் மகிழ்ந்திருக்க
உள்ளம் நெகிழ்ந்திருக்க நலம் அருள்வானாக!..

வாழ்க நலம்..
***