நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், செப்டம்பர் 21, 2017

சப்தமங்கை 1

திருக்கயிலாய மாமலை...

பொன்னந்தி வேளையில் மாலைக் கதிரவனின் கதிர்களால் 
தங்கமயமாக தக..தகத்துக் கொண்டிருந்தது - 


ஐயனின் அருகிருந்தாள் - அம்பிகை..

நாம் ஆனந்தமாக விளையாடி எத்தனை நாட்களாகின்றன!..

மின்னல் கீற்றுப் போல அம்பிகையின் உள்மனதில் ஆவல் தோன்றி மறைந்தது...

அவ்வளவுதான்.. 
ஈசன் எம்பெருமானின் திருமுகத்தில் மந்தகாசம் அரும்பிற்று...

ஈசனுக்குத் தன்னை ஒளித்து விளையாடினாள் அம்பிகை..
அந்த விளையாட்டு வினையாகப் போகின்றது என்பதை அறியாமல்!...

விளையாட்டு நன்றாகப் போய்க்கொண்டிருந்த பொழுதில் -
என்னைக் கண்டு பிடி!.. - என, தன்னை ஒளித்து விளையாடினான் - ஈசன்...

அம்பிகை சிவ தரிசனம் பெறுவதில் சிக்கலுற்றாள்..

ஈசன் எம்பெருமானைக் காணாமல் தவித்தாள்.. கலங்கினாள்..

அம்பிகையின் தவிப்பைக் கண்டு அயர்ந்த எம்பெருமான் -
முன்னொரு சமயம் எம்மை வணங்கிய தலங்கள் ஏழிலும் எம்மைக் கண்டுணர்வாய்!.. - எனத் திருவாய் மொழிந்தான்...

இதைத்தான் அம்பிகையின் திருவுள்ளமும் விரும்பியது போலும்!..

ஈசன் எம்பெருமான் குறித்தருளிய ஏழு திருத்தலங்களும் அம்பிகையின் நெஞ்சகத்தில் தாமரைப் பூக்களாக மலர்ந்தன..

அந்தத் திருத்தலங்கள் ஏழும் - 
மகிஷாசுரனை வீழ்த்துதற்கு எழுந்தபோது வழிபடப்பட்டவை.....

மகிஷனின் மீது கொண்ட கடுங்கோபத்துடன் எழுந்த அம்பிகை தன்னுள் ஒருங்கிணைந்திருந்த ஏழு சக்திகளையும் வெளிப்படுத்தினாள்..

அந்த சக்திகள் -
ஸ்ரீபிராமி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவைஷ்ணவி,
ஸ்ரீவராஹி, ஸ்ரீமாகேந்திரி, ஸ்ரீசாமுண்டி - என, ஏழு ரூபங்களாக நின்றன..

இந்தத் திருமேனிகளுடன் ஈசனை ஏழு தலங்களில் வழிபட்டாள் - அம்பிகை..

அதனைத் தொடர்ந்து எல்லா வல்லமைகளையும் பெற்று
ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக திருக்கோலம் கொண்டு நின்றருளினள்..

பல்வேறு நாடகங்களுக்குப் பின்னர் -
மகிஷாசுரனை வதம் செய்து அவனது தலையின் மீது
திருவடி பதித்து நின்றனள் - என்பது திருக்குறிப்பு..

அப்படியாகிய திருத்தலங்கள் ஏழிலும் வழிபடவேண்டும் என்ற பேராவலுடன் உலகாளும் அன்னை உமா மகேஸ்வரி முன் நடந்தாள்...

சப்த மங்கை தரிசனம் - 1
 சக்ரமங்கை...

ஸ்ரீபிராம்மி வழிபட்ட திருத்தலம்..


சப்த மங்கையருள் முதலிடத்தில் இருப்பவளாகிய ஸ்ரீ பிராமியின் திருக்கோலங்கொண்டு சிவபெருமானை வழிபட்ட தலம் சக்ரமங்கை..

இத்தலத்தில் அம்பிகை சிவபூஜை செய்தபோது
தனது நெற்றிக் கண்ணைக் காட்டியருளினன் - என்பது ஆன்றோர் வாக்கு...

ஸ்ரீ தேவநாயகி அம்பாள்- பக்தர்களைக் காப்பதற்கென்று
வலத் திருவடியினை முன் வைத்த நிலையில்
நின்ற திருக்கோலத்தில் திகழ்கின்றாள்..

சிவ ஸ்தலங்களில் வழிபாடு செய்து வந்த
அநவித்யநாதர் - அனவிக்ஞை எனும் தம்பதியர்க்கு
இந்த சக்கராப்பள்ளி தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை எனும் வடிவில் அம்பிகை தரிசனம் அளித்தனள் என்பது திருக்குறிப்பு..

சலந்தரனை அழித்த சக்ராயுதத்தினை சிவபெருமான் ஏந்தியிருந்தார்..

அதனைத் தாம் பெற வேண்டும்!.. - என, ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு ஆவல்..

அதன் பொருட்டு இத்தலத்தில் வழிபட்டு நின்று சிவபெருமானிடமிருந்து சக்ராயுதத்தினைப் பெற்றனர் என்பதும் தலபுராணம்...

சக்ரவாகப் பறவை சிவபூஜை செய்த திருத்தலம் என்பதாகவும் சொல்லப்படுகின்றது..

ஐந்தலை நாகம் குடையாய் விரிந்திருக்க -
ஆல மரத்தின் கீழாக சனகாதி முனிவருடன்
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி திகழ்வது சிறப்பான திருக்கோலம்..

செங்கல் கட்டுமானமாக இருந்த திருக்கோயிலை
கற்றளியாக எழுப்பியவர் செம்பியன் மாதேவியார்..

செம்பியன் மாதேவியார் சிவபூஜை செய்யும் காட்சி
தெற்குச் சுற்றில் புடைப்புச் சிற்பமாக விளங்குகின்றது..

இந்த சக்கராப்பள்ளியைத் தொடர்ந்து மற்றுள்ள ஆறு ஊர்களிலும் பங்குனி மாதத்தின் சித்திரை நட்சத்திரத்தை அனுசரித்து சப்த ஸ்தானத் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..
இறைவன் - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தேவநாயகி
தீர்த்தம் - குடமுருட்டி
தலமரம் - வில்வம்


பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே..(3/27) 
- திருஞானசம்பந்தர் -
***
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருமூலஸ்தானத்துடன் கூடிய திருக்கோயில் தரைமட்டத்திற்குக் கீழாக இரண்டடி பள்ளத்தில் திகழ்கின்றது..

சூரிய பூஜை நிகழ்வதாகவே இவ்வாறு விளங்குகின்றது என்பது தெளிவு..

பங்குனி மாதத்தின் சங்கடஹரசதுர்த்தி அன்று காலையில் 
சூரியனது கதிர்கள் மூலஸ்தானத்தில் விளங்கும் 
சிவலிங்கத்தைத் தழுவி விளங்குகின்றது...

தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் காவிரிக்குத் தெற்கே பதினேழாவது திருத்தலம்..

ஞானசம்பந்தப்பெருமான் திருப்பதிகம் அருளியுள்ளார்...

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் ஐயம்பேட்டையை அடுத்து விளங்குவது - சக்கராப்பள்ளி..

அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகள் மற்றும் தஞ்சை நகரப் பேருந்துகள் அனைத்தும் சக்கராப்பள்ளியில் நின்று செல்கின்றன..

சக்கராப்பள்ளியைப் பற்றிய முந்தைய பதிவுகளை
கீழுள்ள இணைப்புகளின் வழியே காணலாம்..


* * *

சப்த மங்கை தரிசனம் - 2
 அரிமங்கை...

ஸ்ரீமாகேஸ்வரி வழிபட்ட திருத்தலம்..

ஸ்ரீ மாகேஸ்வரி
சக்கராப்பள்ளி சப்த ஸ்தானத்தின் இரண்டாவது திருத்தலம் அரிமங்கை..

இத்திருத்தலத்தில் தான் - சப்த மங்கையருள்
இரண்டாவதாக விளங்கும் ஸ்ரீ மாகேஸ்வரி சிவபூஜை செய்தனள்..

அம்பிகை இத்தலத்தில் ஈசனின் திருமுடியில் திகழும்
கங்கையைக் கண்டாள் என்பது தலபுராணம்..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி இங்கு தவமிருந்தாள் என்பதும் இத்தலத்தின் பெருமை..

ஒருமுறை வைகுந்தத்திலிருந்து
ஸ்ரீ ஹரிபரந்தாமனைப் பிரிந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி
சிவபெருமானின் தரிசனம் வேண்டி அருந்தவம் செய்தனள்...

மாதவனும் மஹாலக்ஷ்மியைத் தேடி வந்து கோபம் தணிவித்தான்..

அச்சமயம் ஈசனும் அம்பிகையரும் மஹாலக்ஷ்மிக்கும் மாதவனுக்கும் திருக்காட்சி நல்கினர் - என்பது திருக்குறிப்பு...

பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் விளங்கும் சிறுமாக்கநல்லூர் - அருகிலேயே உள்ளது...


இறைவன் - ஸ்ரீ ஹரிமுக்தீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஞானாம்பிகை
தீர்த்தம் - சத்தியகங்கை

சக்கராப்பள்ளியைத் தொடர்ந்து வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்க்கு 
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
பெதும்பை எனும் வடிவில் அம்பிகை தரிசனம் அளித்தனள்..

சக்கராப்பள்ளியில் இருந்து தெற்காகச் செல்லும் கிராம சாலையில் இரண்டு கி.மீ., சென்றால் அரியமங்கை திருக்கோயிலை அடையலாம்...

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டை கோயிலடி நிறுத்தத்திலிருந்து சிறுமாக்கநல்லூர் வழியாக ஆட்டோவிலும் வரலாம்..

அரியமங்கை சின்னஞ்சிறிய கிராமம்..
நேரடியாக பேருந்து வசதி எதுவும் கிடையாது...

வழிபடுவதற்குரிய பொருட்களை -
ஐயம்பேட்டையில் வாங்கிக் கொள்வது நலம்..

ஸ்ரீ துர்காபரமேஸ்வரி - பட்டீஸ்வரம்
இன்று முதல் நாடெங்கும் கோலாகலமாக நவராத்திரிப் பெருவிழா ஆரம்பம்..

நவராத்திரி நாட்களுள் முதல் மூன்று நாட்களும்
ஸ்ரீ துர்காபரமேஸ்வரிக்கு உரியவை..

நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டுமென அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...

ஓம் 
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் 
* * * 

செவ்வாய், செப்டம்பர் 19, 2017

மாயத்திரை தேடி..


தெருவில் கடன்பட்டு 
உடன்பட்டு இழிவுற்று
தலையில் மிதிபட்டு
வதைபட்டு உதைபட்டு 
திரையில் பொய்ப்பட்டு 
வயப்பட்டு விருப்புற்று
மனதில் மயக்குற்று 
வீழ்ந்தானே தரையில்!..

தமிழன் பெருந்திரையில் உருக்கண்டு
வெறுந்தரையில் விருந்துண்டு தொலைந்தானே!..


பூம்பட்டுத் துகிலுடுத்து
புதுமஞ்சள் நெற்றியிலே 
செந்தூரத் துளியிட்டு 
மைதீட்டி மலர்சூட்டி
நகைவிழியாள் காத்திருக்க 
நரியலையும் நள்ளிருளில் 
நுரைப்பதுமை தனைத்
தேடி வீழ்ந்தானே!..

தமிழன் தலைவாழை இலை மறந்து
சருகிலையில் விருந்துண்டு தொலைந்தானே!..


பொழுது அதுபோவதற்கு 
என்று மனம் கொள்ளாது
அழுது அதுதுயரம் என்று 
அடிமனதில் பெருஞ்சோகம்
தொழுது அந்த முகப்பூச்சில் 
தன்பேச்சு தான் மறந்து
பழுது இருக்க வேர் 
சிதைத்து வீழ்ந்தானே!..

தமிழன் தன்நிலையைத் தான் மறந்து
மாற்றானின் காலடியில் தொலைந்தானே!..


தாயவளை மறந்தான் 
தந்தையினைத் துறந்தான்
கொண்டவளைப் பிரிந்தான்
கொடிபிடித்து அலைந்தான்
தலைவைத்த தன்மதியைத் 
தான் தொலைத்து நின்றான்
தன்மானம் தனைக்
கெடுத்துக் கொண்டான்..

தமிழன் தான்கொண்ட பேர்அழித்து
பெருங்குழியில் தலைகீழாய் வீழ்ந்தானே!..


நீ வந்து நின்றாலே 
வீடுயரும் என்கிறான்
நீ வந்து இருந்தாலே 
நாடுயரும் என்கிறான்
எவன் வந்து ஆண்டாலும் 
உழைக்கவேண்டுமே..
வியர்வையில் குளிக்க 
வேண்டுமே...

கனவில் கண்ட சோறதுவும் பசியைத் தீர்க்குமா..
கண்ணிருக்க வழி தொலைத்தல் நியாயமாகுமா?..


தமிழன்தன் பெருமைதனை 
உணர்தல் வேண்டாமா..
தாரணியில் தலைநிமிர்ந்து 
வாழ்தல் வேண்டாமா..
கையிரண்டும் தோளிரண்டும் 
விதியை மாற்றுமே..
வீரநடை வெற்றியாகிப் 
புகழைக் கூட்டுமே..தளர்விலாத வாழ்வில் இன்பத் தென்றல் வீசட்டும்..
உயர்க தமிழ் தமிழன் என்று உலகம் பேசட்டும்!..
* * *


அன்பின் கில்லர்ஜி 
அவர்கள் தமது தளத்தில்
வழங்கிய பதிவினை
கீழுள்ள இணைப்பில் காணலாம்..


அந்தப் பதிவு தான்
இன்றைய பதிவுக்கு அடிப்படை..
அவர் தமக்கு நன்றி!..

வாழ்க நலம்.. 
***

வியாழன், செப்டம்பர் 14, 2017

காவிரியே வாழ்க!..

புண்ணிய பாரதத்தில் முக்கியமான பன்னிரண்டு நதிகளில்
கொண்டாடப்படுவது புஷ்கர விழா!..
- என்று பலவகையான ஊடகங்களும் சேதி சொல்கின்றன..

ஒவ்வொரு வருடமும் தேவகுருவாகிய பிரகஸ்பதி (வியாழன்) எந்த ராசியில் பிரவேசிக்கின்றாரோ அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கர விழா நடப்பது வழக்கம் என்கின்றார்கள்..

அந்த வகையில் நேற்று முன் தினம் செப்டம்பர் 12 ( செவ்வாய்க்கிழமை) அன்று திருக்கணித பஞ்சாங்கப்படிகன்யா ராசியில் இருந்து துலா ராசிக்கு  குரு பெயர்ச்சி அடைந்துள்ளார்..

ஆகையால் தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரன் எனும் தேவன் -
அந்த ராசிக்குரிய நதியில் 12 நாட்கள் வாசம் செய்வதாக ஐதீகம்..

இந்த புஷ்கரன் மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானதால்
மேற்சொல்லப்பட்ட 12 நாட்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றது..

எனவே , இந்த 12 நாட்களும் துலா ராசிக்குரிய காவிரியின் படித்துறைகளில் நீராடி வழிபாடு செய்வது உத்தமம் என்பது ஐதீகம்...

ஸ்ரீகாவிரி - அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம்..
நீரின்றி அமையாது உலகு!.. - என்றுரைத்தார் திருவள்ளுவர்..

தண்ணீரும் காவிரியே!.. - என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கு...

ஆழ்வார்களும் நாயன்மார்களும் நீரை -
அதுவும் காவிரியை எப்படியெல்லாம் போற்றியிருக்கின்றார்கள்!..

நாம் தான் - பெற்றோர் பெரியோர் சொல் கேட்பதில்லையே..

தமிழகத்தின்
குறிப்பாக சோழ மண்டலத்தின்
அதிலும் குறிப்பாக தஞ்சை வளநாட்டின் செல்வமகள் - காவிரி...

ஆனால், நாம் அவளைப் போற்றிக் கொண்டாடி காப்பாற்றினோமா!?..

என்றால் - இல்லை!.. - என்பது தான் விடை..

கங்கையிற் புனிதமாய காவிரி!.. - என்று புகழ்ந்தார் தொண்டரடிப் பொடியாழ்வார்..

இன்னும் ஒருபடி மேலாக -

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
எல்லாமும் கண்ணன்.. கண்ணனே!.. - என்று கசிந்துருகினார் நம்மாழ்வார்..

பருகும் நீர் - கண்ணனின் வடிவம் என்றார்.. 

ஆனால் நாம் என்ன செய்தோம்!?..

ஆழ்வார்கள் அப்படிப் புகழ்ந்து போற்றினர் என்றால் -

தேவாரம் பாடிய பெருமக்களும் மகத்தான முறையில் சிறப்பித்து வணங்கினர்..

நம்மாழ்வார் நீரைக் கண்ணனாகக் கண்டார்.. 
அப்பர் பெருமான் நீரை சிவபெருமானாகக் காண்கின்றார்..

மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்!.. - என்பதோடு

தீர்த்தனைச் சிவனை சிவலோகனை மூர்த்தியை !..
- என்று போற்றுகின்றார் திருநாவுக்கரசர்..

தேவாரம் முழுதுமே இவ்வாறு காணலாம்..

ஸ்ரீகாவிரி - மயிலாடுதுறை
வந்தவரை வாழ வைத்தது இந்த மண்..

காவிரியும் இங்கு வந்தவள் தான்!..

தேடி வந்தவள்.. நம்மை நாடி ஓடி வந்தவள்..
ஆனால், அவளை நாம் வாழவைக்கவில்லை...

வேளாண்மையைவிட்டு என்றைக்கு தமிழ் மக்கள் விலகினரோ -
அன்றைக்கே தொடங்கி விட்டது அனர்த்தம்...

வஞ்சக அரசியலுடன் வண்கணாளர்கள் கைகோர்த்துக் கொண்டனர்..

பற்பல காரணங்கள் சூழ்ந்து கொள்ள -
பொன் விளைந்த நிலங்களில் சீமைக் கருவை போடப்பட்டது..
விளையாத தரிசு எனக் காட்டப்பட்டது....

அதற்கு பல்வேறு அரசுத் துறைகளும் உடந்தையாக இருந்தன..

தொடர்ச்சியாக வரப்புகளும் வாய்க்கால்களும் அழிக்கப்பட்டன..

வாரிக் கொடுத்த வயல்வெளி - மனைப் பிரிவுகள் என,  கூறுகளாகியது..

நன்செய் நிலத்திற்கு அந்நியமான சரளைக்கல், ஜல்லி, செம்மண்,
கருமண், பாழடைந்த கட்டிடங்களின் இடிபாடுகள், குப்பைகள் - என, எல்லாமும் கொட்டப்பட்டது..

நிலமகள் அவமானப்படுத்தப்பட்டாள்..

இதையெல்லாம் கண்ட காவிரி மனமுடைந்து போனாள்...

பெரியோர்கள் பலவிதமாக - நதியை நீரைப் புகழ்ந்துரைத்தும்
நாம் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டோமா - என்றால்,

இல்லை!..

இன்றைக்குக் காவிரி வறண்டு கிடக்கின்றது..

ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுக்கு நீர் ஊட்டியவள்!..

இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒழித்துக் கொண்டிருப்பதால்
கடந்த சில ஆண்டுகளில் சரியான மழை இல்லை...

நாம் நீராதாரங்களைப் பெருக்கி காத்து நிற்கும் பண்பையும் இழந்தோம்..

எல்லாவற்றுக்கும் ஒரே பதில் - உலகியல் மாற்றம்!.. என்பதே...

சென்ற மாதம் விடுமுறையில் வந்திருந்தபோது
காவிரியின் நிலைமை கண்டு கண்கள் கலங்கின..

காவிரியோ - முற்றாக வறண்ட நிலையில்..

குடந்தையில் மகாமகக் குளமும் பொற்றாமரைக் குளமும் காய்ந்து கிடக்கின்றன...

தஞ்சை சிவகங்கைக் குளமும் திருஆரூர் கமலாலயமும் மன்னார்குடியின் ஹரித்ரா நதி எனும் திருக்குளமும் தான் தண்ணீருடன் இருக்கின்றன..

காரணம் இவையெல்லாம் அந்த காலத்தில் மாமன்னர்கள்
திட்டமிட்டு அமைத்த கட்டமைப்புகள்...

இன்றைக்கு மக்களாட்சியில்
ஒரு சிறு வாய்க்காலின் பராமரிப்பு - சொல்லும் தரமன்று...

கடும் வறட்சியில் களைப்பாகி தாகமுற்று -
எல்லா உயிர்களும் நல்ல தண்ணீருக்கு பரிதவிக்கின்றன..

மக்கள் தண்ணீரின் தேவையை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர்..

இவ்வேளையில் நீரின் சிறப்பை - காவிரியின் சிறப்பைக் காட்டும் வண்ணம்
காவிரியில் புஷ்கர விழா நிகழ்கின்றது...

புஷ்கர விழாவுக்காக நந்தி மண்டபம், துலாக்கட்டம் - ஆகியன திருப்பணி கண்டுள்ளன..

துலா கட்டத்தின் எதிரே காவிரி நதியில் 100 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் உடைய தொட்டி அமைக்கப்பட்டு அதில் காவிரி நீர் ஆழ்துளைக் குழாய் மூலமாக நிரப்பப்பட்டுள்ளது...காவிரியின் துலா கட்டத்தில் செயற்கைத் தடாகம் அமைக்கு வேளையில் தொன்மையான கிணறுகள் ஒன்பதினைக் கண்டறிந்துள்ளனர்...

இவையெல்லாம் அந்தக் காலத்தில் காவிரியில் நீர் குறையும் போது மக்களின் பயன்பாட்டிற்கு என, அமைக்கப்பட்டவைகளாகும்..மயிலாடுதுறையில்
செப்டம்பர் 12 முதல் 24 வரை இந்த விழா நடக்கின்றது..

தினமும் யாகசாலை பூஜைகளும் மாலை வேளையில் காவிரிக்கு மகா ஆரத்தியும் நிகழும்..

முன்னதாக செப்/11 அன்று மயிலாடுதுறை காவியின் துலா கட்டத்தில் காவிரியன்னைக்கு புதிய சிலை நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்துள்ளன..

மறுநாள் காலை எட்டரை மணியளவில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு காவிரியில் புஷ்கரப் பிரவேசம் நிகழ்ந்தது..

முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர், வள்ளலார் மற்றும் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் துலா கட்டத்தில் எழுந்தருளியிருந்தனர்..

 ஸ்ரீ பரிமளரங்கநாதரும் ஸ்ரீதேவி பூதேவி உடனாக எழுந்தருளியிருந்தார்..

ஆராதனைக்குப் பின் காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ந்தது..
மக்கள் ஆயிரக்கணக்கில் தீர்த்தத் தொட்டியில் நீராடி வருகின்றனர்..புஷ்கர வேளையில் நீராடினால் 
பாவங்கள் எல்லாம் தொலையும்!.. 
-  என்பது நம்பிக்கை...

நீரை மதிக்காத பிழையும் 
ஆற்றைக் கெடுத்த பிழையும் 
இயற்கையை அழித்த பிழையும் 
முதற்கண் அழியட்டும்..

இதன் பிறகாவது
வயலும் வரப்பும் வாழட்டும்..
நீரும் சீரும் பெருகட்டும்..


காவிரி புஷ்கர விழாவினைப் பற்றி -
திரு Dr. B. ஜம்புலிங்கம் அவர்கள் வழங்கிய பதிவினை இங்கே காணலாம்..

மக்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கான வசதிகளை
மாவட்ட நிர்வாகத்தினரும் மற்றும் ஆன்மீக அமைப்பினரும் செய்துள்ளனர்..

பவானி, மேட்டூர், கொடுமுடி, திருச்செங்கோடு, திருப்பராய்த்துறை, ஸ்ரீரங்க,ம், திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம்,மயிலாடுதுறை பூம்புகார் -என , காவிரியின் கரை நெடுக இவ்விழா அனுசரிக்கப்படுகின்றது...

பதிவில் உள்ள படங்கள் மயிலாடுதுறையில் நிகழும் புஷ்கர விழாவினைக் காட்டுபவை..

இந்தப் படங்களை Fb வாயிலாகப் பெற்றேன்..
வலையேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

நீரைக் காப்போம் - என
மக்கள் மனங்களில் 
புதிய எழுச்சி உண்டாகட்டும்.. 
அதற்கு தற்போது கொண்டாடப்படும் 
புஷ்கர விழா உறுதுணையாகட்டும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
* * * 

செவ்வாய், செப்டம்பர் 12, 2017

சக்கராப்பள்ளி 2

சக்கராப்பள்ளித் திருத்தலத்தைப் பற்றிய தகவல்கள் தொடர்கின்றன..

முந்தைய பதிவினை - இங்கே காணலாம்...


திருமூலஸ்தானத்தில் ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர்..

சக்ரவாகப் பறவை நல்லறிவு பெற்று சிவபூஜை செய்ததாக தல புராணம்..

சலந்தரனை அழித்த சக்ராயுதத்தினை சிவபெருமான் ஏந்தியிருந்தார்..

அதனைத் தாம் பெற வேண்டும்!.. - என, ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு ஆவல்..

அதன் பொருட்டு இத்தலத்தில் வழிபட்டு நின்று சிவபெருமானிடமிருந்து சக்ராயுதத்தினைப் பெற்றனர் என்பதும் சொல்லப்படுகின்றது..


இத்தகைய புண்ணியத் தலத்தில் தாமும் வழிபடவேண்டும் என்ற பேராவல் உலகாளும் அன்னை உமா மகேஸ்வரியின் உள்ளத்திலும் எழுந்தது..

அந்த ஆவல் - மகிஷாசுரனை வீழ்த்துதற்கு எழுந்தபோது நிறைவேறியது...

அம்பிகை தன்னுள் ஒருங்கிணைந்திருந்த ஏழு சக்திகளையும் வெளிப்படுத்தினாள்..

அந்த சக்திகள் -
ஸ்ரீபிராமி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவைஷ்ணவி,
ஸ்ரீவராஹி, ஸ்ரீமாகேந்திரி, ஸ்ரீசாமுண்டி - என ஏழு ரூபங்களாக நின்றன..

இந்தத் திருமேனிகளுடன் ஈசனை ஏழு தலங்களில் வழிபட்டாள் - அம்பிகை..

அதனைத் தொடர்ந்து எல்லா வல்லமைகளையும் பெற்று
ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக மகிஷாசுரனை வதம் செய்தனள் - என்பது திருக்குறிப்பு..

சப்த மங்கையருள் முதலிடத்தில் இருப்பவளாகிய ஸ்ரீ பிராமி வழிபட்டதனால் - இத்தலம் சக்ரமங்கை எனப்படுகின்றது...

மற்றொரு சந்தர்ப்பத்தில் -

திருக்கயிலாய மாமலையில் ஈசனுக்குத் தன்னை ஒளித்து விளையாடினாள்..
அந்த விளையாட்டு வினையாயிற்று..

அம்பிகை திரும்பவும் சிவ தரிசனம் பெறுவதில் சிக்கலுற்றாள்..

இப்போது -

என்னைக் கண்டு பிடி!.. - என, தன்னை ஒளித்து விளையாடினான் - ஈசன்...

ஈசன் எம்பெருமானைக் காணாமல் தவித்தாள்.. கலங்கினாள்..

அம்பிகையின் தவிப்பைக் கண்டு அயர்ந்த எம்பெருமான் -

முன்னொரு சமயம் எம்மை வணங்கிய தலங்கள் ஏழிலும் எம்மைக் கண்டுணர்வாய்!.. - எனத் திருவாய் மொழிந்தான்..

அதன்படி இத்தலத்தில் அம்பிகை சிவபூஜை செய்தபோது
தனது நெற்றிக் கண்ணைக் காட்டியருளினன் - என்பது ஆன்றோர் வாக்கு..

இப்படியெல்லாம் சிறப்பு பெற்ற சந்நிதி..
ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் சந்நிதியில் மனமுருக நிற்கின்றோம்...

ஐயன் எம்பெருமானுக்கும் ஆருயிர்க்குமான உறவு நெஞ்சகத்தில் புலப்படுகின்றது..

காலகாலமாக நம்மை அணைத்துக் காக்கும் ஐயனின் திருவடிவம் மனத்திரையில் எழுகின்றது..

அம்மையே!.. அப்பா!.. அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயகா!.. - என மனம் கண்ணீர் வடித்துக் கதறுகின்றது...

தேவதேவருக்கும் கிட்டாத திருக்காட்சி நமக்குக் கிட்டுகின்றது...

கண்களைத் துடைத்துக் கொண்டு திருநீற்றினைத் தரித்துக் கொள்கின்றோம்..

ஐயனின் மூலஸ்தானத்துடன் இணைந்ததாக தென்புறத்தில் ஒரு சந்நிதி..

புகழான திருக்கோயில்களின் அமைப்பில் அது தியாகேசனின் சந்நிதியாகும்..

அதனுள் தியாகேசனின் திருமேனி இல்லை..

ஆனால், நந்தியம்பெருமான் காத்துக் கிடக்கின்றார்..

அந்த சந்நிதியினுள் சிவகயிலாய சுதை சிற்பமும்
சற்றே பின்னமான சிலைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன...

மகாமண்டபத்தில் இந்தப் பக்கம் நால்வர் திருமேனிகள்..

ஈசான்ய மூலையில் ஸ்ரீ தண்டாயுதபாணி.. பாணலிங்கம்..
அருகில் ஸ்ரீ பைரவமூர்த்தியுடன் சூரியன்...

மறுபடியும் திருமூலஸ்தானத்தை வணங்கியபடி வெளியே வருகின்றோம்..

தென்புறத் திருச்சுற்று.. மெத்தென பசும்புல் பரவிக் கிடக்கின்றது..

இருந்தாலும் அவ்வப்போது நெருஞ்சி காலை பதம் பார்க்கின்றது..

திருக்கோட்டத்தில் அழகான விநாயகர்..

அதற்கடுத்ததாக ராஜராஜசோழனின் பாட்டியாராகிய
செம்பியன் மாதேவியார் மலர் கொண்டு சிவ பூஜை செய்யும் அற்புத சிற்பம்...

நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றது..


செங்கல் கட்டுமானமாக இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றியவர் - செம்பியன் மாதேவியார் என்பது கல்வெட்டுச் செய்தியாகும்..

அடுத்ததாக தெக்ஷிணாமூர்த்தி சந்நிதி..

ஸ்வாமிக்கு ஐந்தலை நாகம் குடையாக விளங்குகின்றது.. திருவடியில் நந்தி..
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. அழகான வேலைப்பாடு..

நிருதி மூலையில் கணபதி சந்நிதி..
அடுத்ததாக வள்ளி தேவயானையுடன் சரவணப் பெருமான்...


பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறனார் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.. (3/27)
மூலஸ்தானத்தின் பின்புறம் லிங்கோத்பவர்..
கோட்டம் முழுதும் அழகழகான சிற்பங்கள் அணி செய்கின்றன..

வடக்குத் திருச்சுற்றில் சண்டிகேசர்.. துர்கா சந்நிதி..

இத்திருக்கோயிலில் நடராஜர் சபா மண்டபம் இல்லை..

நவக்கிரக மண்டலமும் இல்லை..

திருக்கோயிலின் ஈசான்யத்தில் நந்தி மண்டபத்துடன் இணைந்ததாக அம்பிகையின் சந்நிதி..
அம்பிகை சந்நிதி விமானம்
அம்பிகையின் சந்நிதிக்கு நேரெதிராக குங்கிலியக் குண்டம்...
அவ்வப்போது நேர்ந்து கொள்பவர்கள் குங்கிலியம் போடுகின்றார்கள்...

சமீப காலமாக பற்பல விசேஷங்கள் திருக்கோயிலில் அனுசரிக்கப்படுகின்றன..

மாதந்தோறும் பிரதோஷ வைபவங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றது..

பங்குனியில் சித்திரை நட்சத்திரத்தை அனுசரித்து சப்தஸ்தானத் திருவிழா நிகழ்கின்றது..

மக்கள் ஆரவாரத்தோடு ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர்..


எப்பொழுதும் சந்நிதிக்கு முன்பாக நந்தியம்பெருமானைப் படமெடுப்பது வழக்கம்..

இங்கே பிரதோஷ வழிபாடுகள் நடந்து கொண்டிருந்ததால் திரளாகப் பெண்கள் கூட்டம்..

அதனால்-
அலங்காரத்துடன் திகழ்ந்த நந்தியம்பெருமானை எடுக்கமுடியவில்லை...

பொழுது நன்றாக இருட்டி விட்டது..

கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்கி விட்டு புறப்பட்டபோது -
சிவகயிலாய வாத்யத் திருக்கூட்டத்தினர் கோயிலினுள் நுழைந்தனர்..

அடுத்த சில நிமிடங்களில் -
எட்டுத் திக்கும் பரவியது - சிவகயிலாய வாத்யங்களின் பெருமுழக்கம்..

திருக்கயிலாய மாமலை போலாகியது திருக்கோயில்..

இத்தகைய சிறப்புகளுடன் இன்னொரு தனிச்சிறப்பாக -

பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியன்று காலையில்
சூரியனின் செந்நிறக் கதிர்கள் சந்நிதிக்குள் சிவலிங்கத்தின் மீது படர்கின்றன..

அதே நாளன்று மாலையில் -
வேறொரு திருக்கோயிலில் மாலை வேளையில் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் சந்நிதிக்குள் சிவலிங்கத்தின் மீது படர்கின்றன..

அது எந்தக் கோயில்!?..

அடுத்து வரும் பதிவில் -
சப்த மங்கை திருத்தலங்களுடன் தரிசிப்போம்!..


பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.. (3/27)

ஓம் நம சிவாய சிவாய நம.. 
* * *

திங்கள், செப்டம்பர் 11, 2017

நேசம் மறக்கவில்லை


ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?..
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ!..

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணன் அழகு முழுதில்லை..
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்!..


ஓய்வும் ஒழிதலும் இலாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப்போதும்!..

கண்ணன் புரிந்து விட்ட பாவம் - உயிர்க்
கண்ணனுரு மறக்கலாச்சு
பெண்களில் இனத்திலிது போல - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ!...


தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதும் இல்லை தோழி..

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்களிருந்து பயனுண்டோ?..
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி!..
* * * 

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு!..
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க..
நன்மை வந்தெய்துக.. தீதெலாம் நலிக!..
***

இன்று மகாகவியின் நினைவு நாள்..

இருள் சூழ்ந்திடும் வேளையில்
பாரதியின் வார்த்தைகளே கைவிளக்கு!..

பாரதி வாழ்க.. பாரதி வாழ்க!..

ஓம் சக்தி ஓம்!..
* * * 

வெள்ளி, செப்டம்பர் 08, 2017

காக்கையின் பாட்டு

நேற்று வியாழக்கிழமை இரவு வேலை சற்று அதிகம்.. 
காலையில் அறைக்குத் திரும்புவதில் தாமதம்..

இரவு வேலைக்குச் செல்லும்போது இணைய இணைப்பினை எடுத்துச் செல்லாததால் வலையுலகின் நடப்புகள் தெரியவில்லை..

அறைக்குத் திரும்பிய பின்னர் தான் தெரிகிறது - அன்பின் ஸ்ரீராம் அவர்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளியிருப்பது..

நேற்றைய அறிவிப்பின்படி - 
வருகின்ற வியாழன்று காக்கையின் பாடல் வெளியாக இருந்தது..

ஆனால்,
கொடுத்து வைத்த காக்கை!..

இன்று காலையிலேயே எங்கள் Blog ல் கவிதை வெளியாகிவிட்டது..

அதற்குப் பின்னும் தோரணம் கட்டாமல் இருந்தால் எப்படி!?..

இதோ - நமது தளத்திலும்!..

உங்களுடன் உங்கள் காக்கை!..
* * *

காகா.. காகா.. கா..
காகா.. என்றபடி -

நான் வாசற்படியில்
வந்தமர்ந்தேன்..
கண்டங்கருப்பாய்
சஞ்சலம்..
காக்கையைக் கண்டதும்
சங்கடம்..
கண்களில் சகுனம்..
காலையில் சலனம்..கண்டத்தில் வெள்ளை
மணிக் காக்கை!..
கன்னங் கரேலென்று
கருங் காக்கை?..
இடம் நல்லதா..
வலம் நல்லதா..
மனம் நல்லதென
அறியீரோ!..

மொட்டை மாடியில்
எனைக் கண்டால்
மூடியே வைப்பீர்
வற்றலைத் தான்..
அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..

ஆற்றில் குளித்து
சிறகு உலர்த்தி
குப்பை கூளம்
கிளறி நின்றோம்..
கூச்சல் கூட்டம்
பொறுக்காமல்
வேட்டுகள் போட்டு
எமை அழித்தீர்..ஆயினும் என்பணி
மறந்தேனா..
அன்பெனும் வழியைத்
துறந்தேனா?..
கா..கா.. என்றே
கரைந்திருந்தேன்..
கா.. கா.. என்றே
சேர்ந்திருந்தேன்!..

கா.. கா.. என்றேன்..
நோக்கவில்லை..
கரியன் கரைந்ததை
கேட்கவில்லை..
சென்றவர் சேர்ந்தவர்
இது என்றான்..
முன்னோர் மூத்தோர்
வடிவென்றான்..

இல்லை.. இல்லை..
நான்.. என்றேன்..
என் விடை எவரும் 
விரும்பவில்லை...
சிறு புன்னகை கூட
அரும்பவில்லை..
முனைப்பாய் எவரும்
நினைக்கவில்லை..

எனக்கே என்னைப்
பிடிக்கவில்லை..
எனக்கே என்மனம்
பொறுக்கவில்லை...
மானிடர் மடமை
தெளியவில்லை.
மானிடர் மனமும்
புரியவில்லை..கருவில் சுமந்த 
உன் அன்னை
என்னைப் போன்றே
வந்தாளா?..
தோளில் சுமந்த 
உன் தந்தை
காக்கை என்றே
நின்றாரா?..

கரவாதுண்ணும்
காட்சியன்றோ 
காணச் சொல்லிக்
காட்டிற்று...
கதையாய் கதையாய்
எதை எதையோ
கருதிக் கொள்ள
நான் பழியா!?..

முன்வினை இன்னும்
முடியலையா?..
ஏழ்பிறப்பு என்பதும்
தீரலையா?..
கா.. எனக் கரைந்தும்
புரியலையா!..
கருத்தில் எதுவும்
ஏறலையா?..

கா.. கா.. என்றேன்..
கரவாதிருப்பீர்..
கா.. கா.. என்றேன்..
கலந்தினிதிருப்பீர்!..
கா.. கா.. என்றேன்..
கருணையில் வாழ்க..
கா.. கா.. என்றேன்..
கனிவுடன் வாழ்க!..

கா.. கா.. என்றே
கரைந்ததனால்
கண்டவர் மனதினில்
பதியவில்லை...
காக்கையின் மொழியும்
புரியவில்லை!..
வேறொரு வழியும்
தெரியவில்லை..

ஏழரைச் சனியின்
கொடுமை பெரிது..
தப்பிப் பிழைத்தால்
நாள் இனிது!..
கைப்பிடி சோற்றில்
பழி தொலைந்தால்
காக்கைக்கன்றோ
பழி தொடரும்!?.

உன்நிழல் போல
உன் வினையும்!..
உன்னுடன் தானே
உடன் சேரும்!..
உன்பசி தீர 
நான் தின்றால்
மனிதா உன்பழி
எப்படித் தீரும்?..

காரியின் நல்லருள்
வேண்டும் எனில்
காரியின் கால்களில்
விழவேண்டும்..
காரியின் அடிமை
எனக்கெதற்கு
கையூட்டளித்துக்
களிக்கின்றீர்?..கையூட்டளிக்கும்
மானிடரே..
கா.. கா.. என்றதும்
உமக்கல்ல..
கா.. கா.. சிவனே..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..

காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க காவினை
எனக் கரைந்தேன்....
கருணை இலாமல் 
காடழித்தீர்..
கா.. எனக் கலங்கி
நான் கரைந்தேன்!..

காக்கைகள் கலந்ததை
கணடதுண்டோ?.
கா.. கா.. என்றதும்
அதற்கேயாம்!.
கடுவிழி நாயாய்
அலைபவருக்கு
காக்கை மொழியும்
புரிவதில்லை!..

காக்கை நிறத்தில்
பெண் என்றால்
கலங்கித் தவித்துப்
பரிதவிப்பீர்..
கடுவினை தீர்ந்திட
வேண்டும் எனில்
காக்கையைக் கூவி
விருந்து வைப்பீர்!..

இருந்தவர் பசிக்கு
சோறிடவில்லை..
சென்றதும் பழியெனப் 
பதறுகின்றீர்!..
தன்பிழை என்மேல்
ஏற்றி வைத்து..
எள்ளுடன் சோற்றை
ஏந்தி நின்றீர்!..

என்னே மடமை..
இதுவோ மானிடம்..
மானிடர் மடமை
விலகவில்லை..
காகா.. என்றதும்
தெரியவில்லை..
 கா.. கா.. என்றதும்
புரியவில்லை...

சுற்றம் சூழல்
வாழ்வதற்கே
கா.. கா.. என்று
நான் கரைந்தேன்..
அஃறிணை என்றே
எனைப் பழித்தீர்..
நல்லன மறந்து
தவறிழைத்தீர்..

உன்இனம் இனிதாய்
வாழ்வதற்காய்
என்போல் பறவைக்
குலம் கெடுத்தாய்..  
கூட்டினை அழித்தாய்..
காட்டினை எரித்தாய்..
தீராப் பழியை
நீயே விளைத்தாய்!..உறவுகள் தொலைத்த
மானிடனே.. உன்
உள்ளம் முழுதும்
பாழிடம்!..
காவினை அழித்த
மானிடமே இனி
வேறெது உனக்கு
வாழ்விடம்?..

காலங்கள் ஆயிரம்
போனாலும்
காக்கையின் குணமோ
கரைய வில்லை..
கற்றவர் மொழியும்
புரியவில்லை
காக்கை மொழியும்
விளங்கவில்லை!..

ஏழைக்கு இரங்குக..
இனிதே நோக்குக.
இருகை அதனால்
இயற்கை போற்றுக..
அன்பை வாங்குக..
மனிதம் தாங்குக..
பண்பைத் துலக்குக..
பகையை விலக்குக..

காகா.. கா..
காகா.. கா..
விடியலில் நானும்
கரைகின்றேன்..

காகா.. கா.. 
காகா.. கா..  
விடியட்டும் என்றே
கரைகின்றேன்..
***