நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 29, 2014

மார்கழிக் கோலம் 14

குறளமுதம்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

தன்னை அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை 
பல வளங்களுடன் இருப்பது போல மாயத் தோற்றங் காட்டி
பின் மறுபடியும் தோன்றுவதற்கு வழி இன்றிக் கெட்டுப் போகும்.

* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 14



உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்.
* * *

ஆலய தரிசனம்
திருச்சேறை



மூலவர் ஸ்ரீ சாரநாதப் பெருமாள்.
உற்சவர் - மாமதலைப் பிரான்.
தாயார் - சாரநாயகி.
தீர்த்தம் - சார புஷ்கரணி

பஞ்ச லக்ஷ்மிகளுடன்அருளும் திருத்தலம்.

சாரநாதப் பெருமானைப் பணிந்து பிரம்ம தேவன் உலகத்தின் உயிர்களை சிருஷ்டிக்கத் தொடங்கினான் என்பது ஐதீகம். 

திருத்தலத்தில் பலகாலம் தவமிருந்த சார மாமுனிவருக்கும் மகரிஷி மார்க்கண்டேயருக்கும் அகத்தியருக்கும் அன்னை காவிரிக்கும் ப்ரத்யட்க்ஷம்.

ஸ்ரீசாரவிமானத்தின் கீழ் கிழக்குமுகமாக நின்ற திருக்கோலம். 
சாரபுஷ்கரணியின் மேற்குக் கரையில் தான் காவிரி கடும் தவமிருந்தாள்..

ஏன்!?

ஒருசமயம் - புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்ரை எனும் நவ கன்னியரும் மானுட வடிவங்கொண்டு விந்திய பர்வதத்தின் சாரலில் விளையாடிக் கொண்டிருந்த போது - 

வானில் சென்ற கந்தர்வன் ஒருவன் அவர்களைக் கண்டு பூமிக்கு வந்தான். 

அவர்களை வலம் வந்து வணங்கினான். 
அவனது அன்பினில் மகிழ்ந்தனர் நதிக் கன்னியர். 

எப்போதும் துடிப்பாக இருக்கும் கங்கைக்கு காவிரிக்கும் மனதில் விபரீதம் ஒன்று தோன்றியது. 

எங்களில் யார் சிறந்தவர்?.. - கேள்வி பிறந்தது - அவர்களிடமிருந்து. 

கந்தர்வன் திடுக்கிட்டான். இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை..

இருப்பினும் எல்லா நதிகளையும் புகழ்ந்துரைத்தான்- கந்தர்வன்.

அவனது புகழுரையில் கங்கையும் காவிரியும் சமாதானம் அடையவில்லை. வாக்கு வாதம் நிகழ்ந்தது. தொடர்ந்தது.

கந்தர்வன் - ஆளை விட்டால் போதும் என தலைமறைவானான். 

கங்கையும் காவிரியும் விவாதத்தில் இருக்க அதில் சம்பந்தப்படாமல் - மற்ற கன்னியர் ஒதுங்கிக் கொண்டனர். பிரச்னை சத்தியலோகத்திற்கே போனது. 

இருதரப்பினரின் விவாதங்களைக் கேட்ட நான்முகன் - 

கங்கை ஆகாயத்தில் தவழ்ந்தவள். ஹரிபரந்தாமன் வாமனனாக அவதாரம் செய்து திரிவிக்ரமனாக அண்ட பிரபஞ்சத்தையும் அளந்தபோது கங்கை நீரைக் கொண்டு தான் - நான் அவருக்கு பாதபூஜை செய்தேன். எனவே கங்கை தான் சிறந்தவள்.உயர்ந்தவள்!.. -  என்று தீர்ப்பு வழங்கினார். 
        
அதைக் கேட்டு மிக்க வருத்தம் அடைந்த காவிரி - நானும் ஒரு நாள் அந்தப் பெருமையைப் பெறுவேன்!.. - எனத் துணிந்தாள்.
   
தன்னை வாழ்த்தி வழிநடத்திய அகத்திய மகரிஷியைப் பணிந்து வணங்கினாள். கங்கையினும் மேலான பெருமையை அடைவதற்கு வழி காட்டுமாறு வேண்டினாள்.

அகத்தியர் கூறிய அறிவுரையின்படி ஹரிபரந்தாமனைக் குறித்து கடுந்தவம் செய்தாள். 

அவளது கடுந்தவத்துக்கு மனம் இரங்கிய ஹரி பரந்தாமன் அவளது தவச் சாலைக்கு ஒரு குழந்தையின் வடிவு கொண்டு தவழ்ந்து வந்தான். 

குழந்தையின் ரூப லாவண்யங்களைக் கொண்டு வந்திருப்பது பரம்பொருளே!. என உணர்ந்து கொண்ட காவிரி - தாய்மை மீதூற பாலகுமாரனை வாஞ்சையுடன் அள்ளி அணைத்துக் கொண்டாள்.. 

அவளது அன்பினில் மகிழ்ந்த பரமனும் -

காவிரி!.. இப்போது உன் மனம் மகிழ்ந்ததா!.. - எனக் கேட்டான்!..
   
ஸ்வாமி!.. எளியவள் மீது இரக்கம் கொண்டு என் மடியில் குழந்தையாகத் தவழ்ந்து என்னையும் பெருமைப்படுத்தினீர். ஆயினும் தமது திவ்ய தேஜோ மயமான திருவடிவைக் கண்டு தரிசிக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்!.. - எனப் பணிந்து வணங்கினாள்..

அவளுடைய அன்பின் பொருட்டு - ஹரிபரந்தாமனும் - சங்கு சக்ரபாணியாக கருட வாகனத்தில் எழுந்தருளினான். 

அவனுடன் - ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி,  மஹாலக்ஷ்மி, சாரநாயகி என ஐந்து தேவியரும் தரிசனம் அளித்தனர்.

அத்துடன் என்றென்றும் சாரபுஷ்கரணியில் காவிரி கலந்திருக்கும்படியான வரமும் அருளினர்.

தன்னைப் பணிந்து வணங்கிய காவிரியின் வேண்டுதலின்படி - பரந்தாமன் இத்திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டான் என்பது ஐதீகம்.

நீர்வண்ணங்கொண்ட காவிரியை - 
தாய் எனக் கொண்டு சிறப்பித்தான் கார்வண்ணக் கண்ணன்!..

காவிரி மேன்மை அடைந்தது - இத்திருத்தலத்தில்!..

அதனாலன்றோ - கங்கையினும் புனிதமாய காவிரி!.. 
- என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் போற்றிப் புகழ்ந்தார்.


காவிரியின் மடியில் கண்ணன் தவழும் நிலையில் சந்நிதி விளங்குகின்றது.

காவிரிக்கு ஹரிபரந்தாமன் திருக்காட்சி நல்கியது தைப்பூச நாளில்!.. இதன் அடிப்படையில் தைப்பூச பெருந்திருவிழாவின் போது சாரபுஷ்கரணியில் தீர்த்தமாடி பெருமாளைத் தொழுகின்றனர்.

மன்னார்குடியில் ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் திருப்பணிக்காக இவ்வூர் வழியாக கற்களை ஏற்றிக் கொண்டு பல நூறு வண்டிகள் சென்றன. 

அவற்றின் தலைவனாக இருந்தவன் வண்டிக்கு ஒரு கல் வீதம் சாரநாதப் பெருமாள் கோயிலுக்குக் காணிக்கை அளித்தான்.  

இதை அறிந்த மன்னன் - பிழை செய்தான் என்று வண்டிக்காரனைத் தண்டிக்க முற்பட்டபோது - சாரநாதப்பெருமாள் - ராஜகோபால ஸ்வாமியாக திருக்காட்சி அளித்ததாக ஒரு வரலாறு உண்டு!..


கிழக்கு நோக்கிய பிரம்மாண்டமான ராஜகோபுரம். சாரபுஷ்கரணியின் கரையில் பிரம்மன், அகத்தியர், காவிரி - அருள்பாலிக்கின்றனர்.

திருக்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள், ராஜகோபாலன், நரசிம்மர், ஆண்டாள் - சந்நிதிகள் விசேஷமானவை.

குடந்தையிலிருந்து திருச்சேறைக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்சேறையில் திகழும் இன்னொரு திருக்கோயில் ஸ்ரீ ஞானவல்லி சமேத ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோயில்.

நெடுஞ்சாலையின் அந்தப்பக்கமாக சற்று உள்ளே இருக்கின்றது சிவாலயம்.

திருச்சேறையை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை எம்பெருமான் டிருவடியைச் சிந்தித்தேற்கு என
ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்புதானே!..(1584)
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி (ஏழாம் பத்து நான்காம் திருமொழி)

* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 13


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும்போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருச்சேறை


ஸ்ரீ சாரபரமேஸ்வர ஸ்வாமி
இறைவன் - செந்நெறிச் செல்வன், சாரபரமேஸ்வரர் 
அம்பிகை - ஞானவல்லி, ஞானாம்பிகை.
தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம்
தலவிருட்சம் - மாவிலங்கை

தலப்பெருமை

தானே தலைவன் எனத் தருக்கித் திரிந்த தட்சன் தன் பிழைதனை உனர்ந்து மனம் வருந்தி சிவபூஜை செய்த திருத்தலங்களுள் திருச்சேறையும் ஒன்று. 

மாசி மாதத்தில் சூர்யன் சிவபூஜை செய்யும் திருத்தலம்.

மாசி மாதத்தின் 13,14,15 - ஆகிய மூன்று நாட்களிலும் காலையில் சூரியன் தன் இளங்கதிர்களால் அம்மையப்பனின் திருப்பாதங்களைப் பூஜிக்கின்றான். 

இந்த மூன்று நாட்களிலும் மாலை நேரத்தில் - தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் திருக்கோயிலில் சூரிய பூஜை நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் எதிரே தீர்த்தக் குளம். 

அம்பிகை ஞானவல்லி!.. ஞானாம்பிகை என்பதும் அவளுக்குரியதே!..
இறைவனுக்கு இடப்புற்த்தில் - கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம்.

இத்திருக்கோயிலில் ஸ்ரீதுர்க்கை மூன்று திருவடிவங்களில் அருள்கின்றாள்.

திருத்தலத்தின் தலவிருட்சம் மாவிலங்கை. 

மூன்று மாதங்களுக்கு இலையாகவும், மூன்று மாதங்களுக்கு பூக்களாகவும் மூன்று மாதங்களுக்கு இலை பூ எதுவுமின்றியும் விளங்கக் கூடிய அற்புத மரம்.

ஸ்ரீ ருண விமோசன லிங்கம்
மேலைத்திருச்சுற்றில் மார்க்கண்டேய மகரிஷி பிரதிஷ்டை செய்த ருண விமோசன லிங்கம்!..

விதிவலியால் வறுமையுற்ற மக்களுக்கு வரப்பிரசாதமான சந்நிதி!..

இதனால் - ருண விமோசன தலம் என சிறப்பிக்கப்படுகின்றது!..

ருணம் எனில் கடன் என்பது பொருள்.. நம்முடைய கடன்கள் தீரும் தலம் என்கின்றனர்.

நம்முடைய கடன்களில் எந்தக் கடன் தீரவேண்டும்!..

நாம் இந்தப் பூமியில் பிறந்து பட்ட கடன்கள் எத்தனை எத்தனையோ!?..

சிந்திப்பதற்கு அருமையான விஷயம்!..

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்!.. -  என்பார்கள்.

அதைப் போலத்தான் - வந்த கடனும் வருகின்ற கடனும்!..

நம்முடைய கடன்கள் எவற்றையும் நம்மால் தீர்க்க முடியாது!..
அவற்றைத் தீர்த்துக் கொள்ளவும் முடியாது!..

ஆனால் - வழக்கம் போல - பரிகாரம் பிராயச்சித்தம் என்ற பேரில் மக்களின் மனம் திசை திருப்பப் பட்டுவிட்டது.

அதனால் - வட்டிக்கு வாங்கிய கடன் தீர வேண்டும் என்று மக்கள் விருப்பம் கொண்டு அலைகின்றனர்.

ஆகாயத்தில் அழகிய கோட்டை கட்டுவதற்காகக் கடன் வாங்கி அல்லல்பட்டு அவதியுற்றால் - ஐயனின் சந்நிதியில் வந்து நிற்கவும் கூடுமோ!?..

நியாயமான வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொள்ள நமக்கு ஒரு துணை வேண்டும்!.. 

துயரும் துன்பமும் சூழ்கின்ற வேளைகளில் சாய்ந்து கொள்ள நமக்கு ஒரு தோள் வேண்டும்!.. 

அப்படி ஒரு துணையும் தோளும் கிடைப்பது - இங்கே!.. இதுவே நிதர்சனம்!..


மேலும் ஒரு சிறப்பாக ஸ்ரீ பைரவரின் சந்நிதி!..

தேவார திருமுறைகளில் ஒரேஒருமுறை மட்டும் இடம் பெற்றுள்ள சொல் -

கால பைரவன்!..

அப்பர் சுவாமிகள் தமது திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால வயிரவனாகி வேழம்
உரித்துஉமை அஞ்சக்கண்டு ஒண்திருமணி வாய்விள்ள
சிரித்துஅருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..

தாருகாவனத்து ரிஷிகள் ஏவிய யானையை - 
ஈசன் வயிரவக் கோலங்கொண்டு உரித்துக் கிழித்தபோது - 
உமையாம்பிகை அஞ்சினாளாம்!..

அதைக் கண்ணுற்ற செந்நெறிச் செல்வனாகிய சிவபெருமான் -
இதற்குப் போய் அஞ்சலாமா!?.. - எனக் கேட்டு புன்னகைத்தானாம்!..

அப்பர் ஸ்வாமிகள் காட்டும் கலைநயம் இது!..

இதே நயத்தினை ஞானசம்பந்தப்பெருமானும் சுட்டிக் காட்டுகின்றார்.

இது மிகப்பெரிய விஷயம். 

ஐயன் செந்நெறிச் செல்வன் என்றும் அம்பிகை ஞானவல்லி என்றும் திருப்பெயர்கள் கொண்டு விளங்குவது மிகப் பெரிய அற்புதம்!..

வயிரவரைக் குறித்த அந்த ஒரு பாடலே போதும்!..
மிகப் பெரிய பிரசனைகளையும் எளிதாக வெல்லலாம்!..

இது எனது அனுபவம். 
துக்கமும் துயரமும் முந்தைய வினைகளால் என்னைச் சூழ்ந்தபோது என்னை மீட்டெடுத்தது - அந்த திருப்பாடலே!..

நாற்பது ஆண்டுகளாகக் கனவிலும் நான் மறவாத திருப்பாடல் அது!..

திருச்சேறை!.. 

சைவமும் வைணவமும் தழைத்திருக்கும் திருத்தலங்களுள் ஒன்று.

இவ்வூரிலேயே விளங்குவது ஸ்ரீசாரநாதப்பெருமாள் திருக்கோயில்.

குடந்தையில் இருந்து சிறப்பான பேருந்து வசதிகள் திருச்சேறைக்கு உள்ளன.

அப்பரும் ஞான சம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி அதள்பட உரி செய்த விறலினர் 
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை 
செறியுறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே!..(3/86)
திருஞானசம்பந்தர்.

அப்பர் தமது திருப்பதிகத்தில் புராண நிகழ்வுகள் பலவற்றை விவரிக்கின்றார்.
சண்டீசர் வரலாற்றினைக் கூறும் திருப்பாடல் பதிவில் இடம் பெற்றுள்ளது.

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோடாவின் பாலைக்
கறந்து கொண்டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்செந்நெறிச் செல்வனாரே!..(4/73)
அப்பர் ஸ்வாமிகள்.

திருச்சிற்றம்பலம்
* * *

6 கருத்துகள்:

  1. திருச்சேறை பெருமாள் கோவிலும் தரிசன் செய்து இருக்கிறேன்.

    திருச்சேறை பைரவர் மிக சிறப்பு வாய்ந்தவர். திருச்சேறை பதிகத்தை தினம் பாடுவார்கள் என் கணவர்.

    படங்கள், பாடல்கள், தலவரலாறு அற்புதம்.
    வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய தகவலினைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. திருச்சேறை சென்று வந்திருக்கின்றேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வரலாற்று செய்திகள் அருமை நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..