நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 20, 2014

ஸ்ரீ கருமாரியம்மன்

தெய்வீக மணம் கமழும் நாட்களுடன் திகழ்வது ஆடி மாதம். 

சகல சிவாலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் விசேஷங்கள் நிகழ்கின்றன. 

அம்பாள் ஏக நாயகியாக வீற்றிருந்து ஆட்சி செலுத்தும் சக்தி  ஸ்தலங்களிலும் கோலாகலம் கொடி கட்டிப் பறக்கின்றது.

ஆடி மாதத்தின் ஞாயிறு, செவ்வாய்,  மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள்,  பால் அபிஷேகம், பூச்சொரிதல் - போன்ற வைபவங்கள் விமரிசையாக நடக்கின்றன.


திருக்கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் வேப்பிலைத் தோரணம் கட்டி  விரதம் இருந்து அம்மனை வழிபட்டு  கூழ் ஊற்றி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். 

அவரவர் வசதிக்கேற்ப வீட்டிலேயே - துள்ளு மாவு, மாவிளக்கு, இளநீர், நீர் மோர், பானகம், பச்சரிசி கஞ்சி, கூழ் - என அம்பாளுக்கு நிவேதனம் செய்து, வீட்டு வாசலில் வைத்து அனைவருக்கும் பிரசாத விநியோகம் செய்வர். 

அன்பர்கள் தம்  இல்லங்களில் - ஆடி மாதம் முழுவதும் பக்தி மணம் கமழும் என்றால் அது மிகையல்ல!. 

குறிப்பாக பெண்கள் விரதம் இருந்து திருத்தலங்களுக்குச் சென்று அம்மனைத் தரிசிப்பதைப் பெரும் பேறாகக் கருதுகின்றனர். 

அந்த வகையில், யான் பெற்ற பேறாக தரிசனம் செய்த திருத்தலங்களுள் சில திருத்தலங்களை - மீண்டும் தங்களுடன் தரிசிப்பதில் மகிழ்வெய்துகின்றேன்.

திருவேற்காடு.  

இது புராதனமான சிவஸ்தலம். தொண்டை நாட்டின் முப்பத்திரண்டு திருத் தலங்களுள் ஒன்று. சென்னை - பூவிருந்தவல்லிக்கு  அருகே  உள்ளது .  

இறைவன் - ஸ்ரீவேதபுரீஸ்வரர். அம்பிகை - ஸ்ரீவேற்கண்ணி.

தீர்த்தம் - வேலாயுத தீர்த்தம். தலவிருட்சம் - வேல மரம்.

சூர சம்ஹாரத்திற்குப் பின், வேலாயுதத்தினால் தீர்த்தம் உருவாக்கி - முருகன் இறைவனை வழிபட்டதிருத்தலம். 

நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று, இறைவனை வழிபட்டதாக ஐதீகம். வேலமரங்களால் சூழப்பட்டிருந்ததால் வேற்காடு என்பது திருப்பெயர்.

ஐயனும் அம்பிகையும் திருமணக்கோலத்தில் - அகத்திய முனிவருக்கு - திருக் காட்சி அருளிய திருத்தலங்களுள் திருவேற்காடும் ஒன்று.

ஆடல் நாகம் அசைத்துஅள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தார்இவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே!. (1/57)
திருஞானசம்பந்தர்.

ஞான சம்பந்தப் பெருமான் தரிசித்து திருப்பதிகம் பாடிய திருத்தலம். அறுபத்து மூவருள் ஒருவரான மூர்க்க நாயனர்  அவதரித்த திருத்தலம். 

இத்திருக்கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது தான் -

ஸ்ரீகருமாரி அம்மன் திருக்கோயில்!..


தனிப்பெரும் சக்தியாக  அம்பிகை கோயில் கொண்டருளும்  திருத்தலங்களுள் சிறப்புக்குரிய ஸ்தலம் - திருவேற்காடு.

வேற்காடு வளர் வேற்கண்ணி அம்பிகையே - கருமாரி எனத் திருக்கோலம் கொண்டிருக்கின்றாள்.

சந்நிதியில் அன்னையின் இடப்புறம் தூங்கா மணிவிளக்கு சுடர் விடுகின்றது.

தூங்கா மணிவிளக்கின் நடுநாயகமாக சிம்ம வாகனத்தில் அம்பாள் வீற்றிருக்க - இருபுறமும் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன் விளங்க - கூடவே மயிலும் நாகமும் திகழ்கின்றன.

அன்னையின் புகழைப் பேசி முடியாது. கசிந்துருகும் அன்பருக்கு கண் எதிரே  தோன்றி அவள் நிகழ்த்திய அற்புதங்கள் - ஆயிரம்.. ஆயிரம்!..

அம்பாள் திருமேனி சுயம்பு. புற்றினுள்ளிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள். தீராத தீவினைகளையும் தீர்த்து வைக்கும் திருமுக தரிசனம்.

விஷம் தீண்டாத் திருத்தலம் எனும் சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் - நாக வழிபாடு செய்து கொண்டிருந்த ஒரு பக்தரின் கனவில் -  புற்றுக்குள் தான் விளங்குவதாக அருளினள். 

அதன் பின் அன்பர்கள் கூடி புற்றினை அகற்றினர். பெரிய நாகம் ஒன்று புற்றினுள்ளிருந்து வெளியேற - அங்கே அம்பாள் காட்சியளித்தனள் என்பது தலவரலாறு. 

அதன்பின் - அந்த இடம் சிறிய அளவில்  குறிமேடையாக   விளங்கியது. 

60 ஆண்டுகளுக்கு முன் ஸ்வாமி ராமதாசர் என்பவர் அம்பாள் உபாசகராக இத்தலத்தில் விளங்கினார். 

அவரது முயற்சியினால் தான் மூலஸ்தானத்துடன் திருக்கோயில் தோற்றமுற்றது. நாளடைவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய - திருக்கோயிலும் விஸ்தாரமாகியது.


அதிகாலையில் கோபூஜை. ஒவ்வொருநாளும் - நித்ய ப்ரதோஷ வேளையில் குங்கும அர்ச்சனை நிகழ்வதுடன் - பௌர்ணமி தோறும் 108 திருவிளக்கு பூஜை நிகழ்கின்றது.

இத்திருத்தலத்தில் பாற்குட உற்சவம் சிறப்பானது. 

ஆனி கடைசி ஞாயிறு தொட்டு பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் சீரும் சிறப்புமாக ஆடிப்பெருந் திருவிழா நடைபெறுகின்றது. 

திருவிழாவின் ஞாயிற்றுக் கிழமைகளில் - 108 பால்குட அபிஷேகம் கொண்டு - பல்வேறு வாகனங்களில் திருவீதி எழுந்தருள்கின்றனள் அம்பிகை. 

அவளுக்கு -  சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு - என அலங்காரம் செய்து மகிழ்கின்றனர் அன்பர்கள். ஒன்பதாம் ஞாயிறு அன்று தேரோட்டம். 

தீர்த்தவாரி தெப்பம் என - அன்பினில் ஆடிப்பாடுகின்றனர் மக்கள்.  

கயிலாய நாதனின் திருமேனியில் இருந்து அக்னி ஸ்வரூபமாக வெளிப்பட்டு - காலகாலமாக புற்றினுள் சுயம்புவாக இருந்ததனால் சிவாம்சம் கொண்டவள். எனவே கருமாரி அம்மனுக்கு ஐப்பசியில் அன்னாபிஷேகம் நிகழ்கின்றது.

தை மாதத்தில் பிரம்மோற்சவம். மாசிமகத்தன்று - கடற்கரையில் தீர்த்தவாரி காணுகின்றாள் - கருமாரி.

இன்றைக்கு பற்பல ஊர்களிலும் கருமாரி அம்மன் எனும் திருப்பெயருடன் கோயில்கள் விளங்கினாலும் அவை அனைத்திற்கும் இவளே மூலகாரணம்!..


இத்திருத்தலத்தில் புற்றலங்காரம் விசேஷமானது.

திருக்கோயிலில் மிகப் பெரிய புற்று உள்ளது. திருமண தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகளுக்கு இங்கு வேண்டுதல் செய்து கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பதாக ஐதீகம். 

இன்றும்  - பசுஞ்சாணத்தில் இருந்து பெறப்பட்ட சாம்பலே திருநீறு!..


சூலங் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயனறியாத  வடிவுக்கு
மேலங் கமாக நின்றமெல் லியளாளே!..
திருமூலர்.

இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் - திருமணம் நடந்து இரண்டு மாதங்கள். 

சென்னையில் உறவினர் வீட்டில் எங்களுக்கு முதல் விருந்து. சிலநாட்கள் அங்கே தங்கியிருந்தோம். 

ஒருநாள் நானும் என் மனைவியும்  -  காலையில் மாங்காடு சென்று காமாட்சி அம்மனைத்  தரிசனம் செய்து விட்டு - மாலையில் திருவேற்காடு சென்றோம்.

அங்கே - சந்நிதியில்,
முதல் குழந்தை பெண்!.. - என எங்களுக்கு உணர்த்தியவள் இவள்!.. 

நன்மைகளையும் நலன்களையும் வாரித் தந்தவள் இவளே!.. 
துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்தபோது தோள் கொடுத்தவளும் இவளே!..

செல்லாத்தா செல்ல மாரியாத்தா..
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா!..
 
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா..
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா!..
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா..
இந்த ஜன்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா!..

ஓம் சக்தி ஓம்
கருமாரித் தாயே சரணம்!..
* * *

13 கருத்துகள்:

  1. திருவேற்காடு கருமாரியம்மன்
    அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. திருவேற்காடு கருமாரியம்மன் தரிசனம் பெற்றேன். உங்கள் பதிவின் மூலம்.

    கருமாரி அம்மா அனைவரையும் நலமாக வைக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. காப்பாள் கருமாரி காலமும் வேண்டிடச்
    சேர்ப்பாள் தனதருளாம் சீர்!

    மிக மிக அருமையான அற்புதம் நிறைந்த பதிவு!
    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கருமாரியம்மன் மகிமைகள் நிறைந்த பதிவு.ஆடி மாதமே அம்மனுக்கு உகந்த மாதம் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கருமாரியம்மன் குறித்த பகிர்வுக்கு நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்புடையீர்..
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  8. தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ள செய்தியை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..