நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 26, 2014

ஸ்ரீ மஹாசிவராத்திரி - 1

மஹா சிவராத்திரி 
வியாழக்கிழமை
மாசி -  15 (27.02.2014)

திருஞான சம்பந்தப்பெருமான் 
அருளிய 
பஞ்சாட்சரத் திருப்பதிகம் .

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண்  - 22.


துஞ்சலுந் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.

உறங்கும் பொழுதிலும் விழித்திருக்கும் பொழுதிலும்  ஒருமுகமாக  -  வஞ்சம் முதலிய தீய குணங்களில் இருந்து நீங்கி - மனம் கசிந்துருகி நாளும் நமசிவாய எனும் திரு ஐந்தெழுத்தை நினைத்து இறைவனைப் போற்றுக!.. 

தன் உயிரினைப் பறிக்க வந்த - கூற்றுவன் அஞ்சி அலறும்படி உதைத்துக் காத்தருளிய  எம்பெருமானின் திருவடிகளை நினைத்து - மார்க்கண்டேயன் போற்றியது - நமசிவாய  எனும் திருஐந்தெழுத்தே!..

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
  

மந்திரங்களாகவும் , நான்கு மறைகளாகவும் விளங்கி தேவர்களின் சிந்தையில் நின்று அவர்களை ஆட்கொண்டு அருள்வது நமசிவாய  எனும் திரு ஐந்தெழுத்தே ஆகும் . 

தீமைகளுக்கு செந்தழல் - என, மனதினை வளர்த்து செம்மை நெறியில் நிற்கும்  அனைவரும் வேதியர் என - அந்திசந்தி வேளைகளில் தம்நெஞ்சில் தியானிக்கின்ற மந்திரம் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்து
ஏனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி ,  ஒண்சுடராகிய ஞானவிளக்கினை ஏற்றி ஐம்புலன்கள் எனும் நன்புலன்களால் மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுபவர்கட்கு ஏற்படும் துன்பங்களைக் கெடுத்து அவர்களைக் காத்து நிற்பன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.  

நல்லவர் தீயவர் என்ற வேறுபாடு இன்றி விரும்பித் துதிப்பவர்கள் எவரேயாயினும் அவர்களுடைய வினைகளை நீக்கிச் சிவமுத்தி அளிப்பது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

யமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும்  வேளையில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 


கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

மன்மதனின் பாணங்கள் தேன் நிறைந்த  ஐந்து மலர்கள்.  நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்பன ஐம்பூதங்கள். மணம் கமழ  விளங்கும் பொழில்களும் ஐந்து. நல்லரவின் படமும் ஐந்து.  பிறர்க்கு உதவும் கரத்தின் விரல்களும் ஐந்து. 

இவ்வாறு ஐவகையாக விளங்குவன அனைத்திற்கும் மேலாக விளங்குவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.  

தும்மல் , இருமல் தொடர்ந்த பொழுதும் , கொடிய நரகம் போல துன்பத்தை அனுபவிக்க நேர்ந்த  பொழுதும் , முற்பிறப்புக்களில் நாம் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், 

இடையறாது - ஈசனை சிந்தித்திருந்தால் -  மறுபிறவியிலும் நம்முடன் வந்து நமக்குத் துணையாவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..  

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செ ழுத்துமே. 

இறப்பு , பிறப்பு இவை நீங்கும்படியாக சிவமந்திரத்தைத் தியானிப்பவர்களின் துன்பங்களை நீக்குவதும், நாள்தோறும் சகல செல்வங்களைக் கொடுப்பதும்,

சீர்மிகும் நடமாடி மகிழும் எம்பெருமானின் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..   

 
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.  

வண்டு மொய்க்கும் பூக்களைச் சூடியவளான ஏலவார்குழலி சிந்தித்திருப்பது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து எடுக்க முயன்று அதன் கீழேயே சிக்கிக்கொண்ட இராவணன் உயிர் பிழைத்து உய்தல் வேண்டிப் பாடியது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

தம் சிந்தையில் வைத்து வந்தித்தவர்க்கு அண்டங்களையெல்லாம் அள்ளிக் கொடுப்பது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வண மாவன அஞ்செ ழுத்துமே. 

திருமாலும் நான்முகனும் காண இயலாத சிறப்புடைய பெருமானின் திருவடிச் சிறப்புகளை  நாளும் பேசிக் களிக்கும் பக்தர்களின்  ஆர்வமாக விளங்குவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 
 

புத்தர் , சமணர் -  வார்த்தைகளைக்  கருத்தில் கொள்ளாதவராகி, பொய் இல்லாத சித்தம் கொண்டு தெளிந்து தேறியவர் தம் கருத்தில் விளங்குவது -  நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

ஞானமாகிய திருநீற்றை அணிபவருடைய - வினை எனும் பகை தனை, அழித்தொழிக்கும் கூரிய அம்பாக விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்ப ராவரே. 

நற்றமிழும் நான்மறைகளும் கற்று - ஈசனின் பெருமைகளைத் தியானித்து - சீர்காழி மக்களின் மனதில் உறைபவனாகிய ஞானசம்பந்தன் பாடிய - திருவைந்தெழுத்து மாலை - வாழ்வில் கேடுகள் வாராமல் தடுக்கும்.  

திருஐந்தெழுத்து மாலையின் பத்துப் பாடல்களையும் 
சிந்தித்திருக்க வல்லவர் வானவர் ஆவர் - என்பது 
திருஞான சம்பந்தப்பெருமானின் திருவாக்கு.

திருச்சிற்றம்பலம்.

20 கருத்துகள்:

  1. சிவராத்திரி செய்திகள் அறிந்து மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. திரு ஐந்தெழுத்தின் ஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. நாளைய சிவராத்திரிக்கு இன்னிக்கே ஸ்பெஷல் பதிவுப் போட்டாச்சா!?

    பதிலளிநீக்கு
  4. திரு ஐந்தெழுத்து மந்திரம் மிக சிறப்பாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. பாடல்களும், விளக்கங்களும், படங்களும், ஆஹா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. ஓம் நமச்சிவாய ! ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி..

      நீக்கு
  6. OM NAVACHIVAYA
    LISTEN HERE:
    http://www.youtube.com/watch?v=K9sEhVz18n0

    SUBBU THATHA.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை தந்து youtube இணைப்பு வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  7. மஹாசிவராத்திரியை ஒட்டி ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய குறித்த பாடல்களும் கருத்தும் மிகப்பொருத்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா,
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  8. சிவராத்திரி தொடர்பான தங்களது பதிவுகள் மனதில் நிற்கின்றன. ஐந்தெழுத்தின் அருமை பெருமைகளை அழகிய புகைப்படங்களோடு வெளியிட்டுள்ளமை சிறப்பாக உள்ளது. மனதில் ஏதாவது சங்கடங்கள் இருந்தால் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் கூறுங்கள். நீங்கள் தெளிவடைவீர்கள் என்று என் நண்பர் அடிக்கடி கூறுவது இப்பதிவைப்படித்ததும் என் நினைவிற்கு வந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சிவாய நம என்று சிந்தித்திருப்பார்க்கு
      அபாயம் ஒரு நாளும் இல்லை -
      என்பது ஔவையாரின் திருவாக்கு!,
      தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  9. மஹா சிவராத்திரி பற்றி
    மகத்தான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் பாராட்டும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.

      நீக்கு
  10. சிவராத்திரி சிறப்புப் பகிர்வு மிகப் பொருத்தம்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..