நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 14, 2013

திரு ஓணம்

அந்த எலிக்கு - தன்னையே நம்பமுடியவில்லை!..

இப்படியெல்லாம் நடக்குமோ!?.. - தன்னைத் தானே கிள்ளிக் கொண்டது.

நிஜம் தான்!.. தன் எதிரில் காட்சியளிப்பது  - நீலகண்ட சிவம் தான்!..


கண்ணீர் பெருக , இறைவனை வலம் வந்து  - வணங்கி நின்றது!..

ஈசன் - அந்த எலியினை வாழ்த்தி மறைந்தார். ஈசன் விதித்தபடி - தன்னுடலை நீத்து, 

அசுர குலத்தின் மாமணியாகிய ஸ்ரீபக்த ப்ரகலாதனின் வழித்தோன்றலாக - பேரனாகப் பிறந்தது.

ஆகா!.. இப்படி - எலி பேறு பெறும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது?..

இரவு நேரம். அருள் வடிவான சிவலிங்கத்தின் அருகில் நெய் நிறைந்த அகல் விளக்கு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது. அதனுள் நெய் இருக்கும் நெய்யினை சுவைப்பதற்காக - ஆவலுடன் ஓடி வந்த எலி அவசரத்தில் சுடரின் பக்கத்தில் தன் நாவினை நீட்டிவிட  - சுருக் என சுட்டு விட்டது. எலி, பதறித் துள்ளியதில் விளக்கின் திரி தூண்டப்பட்டு முன்னை விட அதிகமாக ப்ரகாசித்தது.

இது போதாதா - எம்பெருமானுக்கு!.. கருணையுடன் காட்சி தந்தார். வரமும் தந்தார் - மாவலி எனும் மன்னனாகப் பிறக்க - என்று!..

இப்புண்ணியம் வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் நிகழ்ந்தது. இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - திருப்பதிகத்தில் பதிவு செய்து - போற்றிப் பாடி மகிழ்கின்றார்.

பலிச் சக்ரவர்த்தி அசுர வேந்தனாக, ஆட்சி செய்து வரும் போது மூவுலகையும் தன் கைக்குள கொண்டு வர வேண்டும் என்ற பேராவலினால் - தேவ லோகத்தைத் தன் அசுரப்படைகளுடன் தாக்க - கடும் போர் - இந்திரனுக்குச் சாதகமாக முடிந்தது.

இதன் பின் - மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் - பெரியதொரு யாகத்தை நடத்தி - ஆயுதங்களுடன் கூடிய பொன் ரதத்தினைப் பெற்றான். அந்த  ரதத்துடன் -

மீண்டும் தேவலோகத்தை முற்றுகையிட - தேவர்கள் இந்திரன் தலைமையில் - வெற்றிகரமாக வெளியேறி  - அசுரவேந்தன் அணுக முடியாத மறைவிடத்தில் தங்கிக் கொண்டு  - தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனையின்படி, ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சரண் அடைந்தனர்.

அசுர வேந்தனின் ஆளுகைக்குள் அமராவதி வந்தது. பலி ஆசைப்பட்டபடி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். தவிர அந்தணர்களையும்  மகரிஷிகளையும் மதித்து அவர்களுக்கு எல்லா வசதிகளையும்  குறைவின்றி செய்து கொடுத்தான்.

தன் மைந்தர்கள் நாடிழந்து வாடுவதனால் வருந்திய அதிதி கணவராகிய  காசியப முனிவரிடம் முறையிட்டாள். அவரோ பரந்தாமனைத் தியானிக்கப் பணித்தார். அதன்படி அதிதி தியானிக்க - ஸ்ரீ மஹாவிஷ்ணு தோன்றி - அவளுடைய கர்ப்பத்தில் - தான் உதிப்பதாக வரமளித்தார்.


அதன்படியே - ஆவணி சுக்ல பட்சம், திருவோண நட்சத்திரத்தில் - உச்சிப் பொழுதில் காசியபர் - அதிதி தம்பதியர்க்கு, அருந்தவ புத்ரனாக - கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சங்கு சக்ரதாரியாக அவதரித்து அவர்கள் மடியில் பாலனாகத் தவழ்ந்தார். 

பெருமானுக்கு வாமனன் எனும் திருப்பெயர் சூட்டப்பட்டது. மகரிஷிகளால் உபநயனம் செய்து வைக்கப்பட்டார். மகிழ்ச்சியுற்ற தேவர்கள் வந்து வணங்கி பெருமானின் திருவருளையும் வேண்டி நின்றனர்.

நிகரற்ற பேரும் புகழும் பெற்று பெருமான் வளர்ந்து  வந்த வேளையில் -

அமராவதி கையில் இருந்து நழுவாமல் இருக்கும்படிக்கு - நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்யுமாறு பலி சக்ரவர்த்திக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.  பலியும் அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் பலியின் புகழ் ஓங்கி வளர்ந்தது.

மூவுலகையும் கவர்ந்து கொண்டதன்றி வேறு குற்றம் ஒன்றும் காணப்பட வில்லை.  ஆயினும்  -  வையம் உள்ளளவும் புகழுடன் இருக்கும்படி  - பலிக்கு அருள் புரியத் திரு உளங்கொண்டார் பெருமான்.

பலி அஸ்வமேத யாகம் நடத்தும் யாக சாலைக்குச் சென்றார். ஸ்வாமியின் தேஜஸைக் கண்டு பிரமித்து மயங்கினர் அங்கிருந்த அனைவரும். வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த பலி, வேண்டுவது யாதெனக் கேட்க -


''..நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!. அதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை!..'' - என்று திருவாய் மலர்ந்தார்.

பலி உளம் மகிழ்ந்து  - ''..ஸ்வாமி!.. தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!..'' - என்றான்.

பெருமானோ - ''.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..''  - என்றார்.

விருப்புடன், தானம் வழங்கப்படும் வேளையில் சுக்ராச்சார்யார் -  அசுர வேந்தனிடம்- ''..வந்திருப்பவன் மாயவன். அவன் கேட்டபடி வழங்காதே!..'' - என்றார். அசுர வேந்தனோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..


- என்று மறுமொழி கூறி நின்றான்.

தன் யாகத்தைக் காப்பதற்காக வந்திருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கு வாமன அவதாரத்தை விவரிக்கும் போது - விஸ்வாமித்ர மகரிஷி - கூறுவதாக  - கம்பர் இராமாயணத்தில் காட்டுகின்றார். இந்தத் திருப்பாடலினுள்,

கொடுப்பதும் அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம் 
உண்பதும் இன்றிக் கெடும்.

எனும் திருக்குறள் பொதிந்திருப்பதைக் கண்டு இன்புறலாம்.
 
இப்படி ஈகையின் பொருள் விளங்கும்படி - கிண்டியிலிருந்து நீரை வார்த்து தானம் செய்கையில் மனம் பொறாத சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி, கிண்டியினுள் விழுந்து நீர் வழியை அடைத்தார். அதை உணர்ந்த பெருமான் தர்ப்பையினால் கிளற, நீர் வழியை அடைத்த சுக்ராச்சார்யார் ஒரு விழியை இழந்தார்.

ஆக, நீர் வழியினை அடைப்பவர்களுக்கு என்ன நேரும் என்று அன்றே சொல்லப்பட்டிருக்கின்றது!..

தடை நீக்கப்பட்டதும், பெருகி வழிந்த நீரை வார்த்து -  அசுரவேந்தன் தானம் கொடுத்ததும் வாமனன் - த்ரிவிக்ரமனான வளர்ந்து ஓரடியால் உலகினையும்  மறு அடியால் விண்ணையும் அளந்தார்.


மூன்றாவது அடிக்கு இடம் இல்லை!.. மீண்டும் வாமனத் திருக்கோலம் பூண்ட பெருமான் - ''..மூன்றாவது அடியை எங்கே வைப்பது?..'' என்றார்.

வந்திருப்பவன் ''பரந்தாமனே!..'' - என்பதைப் பரிபூரணமாகக் கண்ட பலிச் சக்ரவர்த்தி,  ''..பெருமானே!.. என்னையே தருகின்றேன். இதோ என்தலை மேல் தங்களின் திருவடியை வைத்து மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள்!..'' - என்று சிரம் தாழ்த்தி நின்றான்.

 

அப்போது ஸ்ரீப்ரகலாதர் தோன்றி தன் பேரனை வாழ்த்தினார். நான்முகனும் மற்ற மகரிஷிகளும் பரந்தாமனை வேண்டிக் கொள்ள - ஸ்ரீ மஹாவிஷ்ணு புன்னகையுடன் திருவருள் புரிந்தார்.

''..தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, அதைக் கேளாமல் , தன் வாக்கு தவறாமல் தானத்தை வழங்கினான். யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த பலி சக்ரவர்த்தியே அடுத்த மன்வந்த்ரத்தின் இந்திரன்!..'' - என வாழ்த்தி யாகத்தினைத் தொடர்ந்து நடத்தி நிறைவேற்றும்படிக் கூறினார். அதன்படி யாகமும் நிறைவேறியது.

பெருமான்- அசுர வேந்தனிடம்,  வேண்டும் வரம் யாதெனக் கேட்க - ''..ஆண்டுக்கு ஒரு முறை என் மக்களை நான் வந்து சந்திக்கும்படியாக வரம் தருக!..'' - என வேண்டிக் கொண்டான். அவ்வண்ணமே வரமும் பெற்றான்.

அதன்பின் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் அருளாணைப்படி, பாதாள லோகத்துக்கு அதிபதியாகினான் - மாபலிச் சக்ரவர்த்தி.

இப்படி நிகழ்ந்த வாமன அவதாரத்தினை,

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை 
முடியத் தாவிய சேவடி..

- என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் (ஆய்ச்சியர் குரவை) புகழ்கின்றார்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயதெல்லாம் ஒருங்கு. 


என்பது - திருவள்ளுவரின் திருவாக்கு.

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈரடியாலே மூவுலகு அளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் -
                                                               - திருவாசகம்

- என மாணிக்கவாசகர் புகழ்ந்துரைத்து -  போற்றித் திருஅகவல் எனும்  நூலை தொடங்குகின்றார்.


அருணகிரிநாதரும்,

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!..

- என கந்தர் அலங்காரத்தில் முருகப்பெருமானைப் புகழும் போது - வாமன அவதார நிகழ்வினை வர்ணிக்கின்றார்.

ஸ்ரீ வாமன மூர்த்தியின் திருஅவதார தினம்- ஆவணி 31 (16/9/2013) திங்கட் கிழமை!.. 

திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்வுறும்.

நாமும் சிந்தையில் செருக்கு நீங்கியவராக - அன்பெனும் நீர் வார்த்து ஐயனின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொள்வோம்!..

இந்த வாமன மூர்த்தியைத் தானே - 

ஓங்கி உலகளந்த உத்தமன்!.. 

என்று - கோதை ஆண்டாள் - கொஞ்சும் தமிழில் கூறினாள்.

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!..
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வோம்!.. 

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!..
ஓம் நமோ நாராயணாய.. 

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் திரு. ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. திரு ஓணம் பற்றி அறிந்து கொண்டேன்.
    வேதாரண்யம் பற்றியும் அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்கின்றேன்.. நன்றி!..

      நீக்கு
  3. திருக்குறள் பொதிந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் பொதிந்திருப்பதும் திருக்குறள்.. நெஞ்சில் பதிந்திருப்பதும் திருக்குறள்!.. அன்பின் இனிய தங்களின் கருத்துரைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி!..

      நீக்கு

  4. வாமனாவதாரக் கதை நன்று. வாழ்த்துக்கள். திருவோணம் பற்றிய பதிவு ஒன்று என் பதிவிலும் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!.. தங்களின் நல்வாழ்த்துக்கள் என்னை மேம்படுத்தும்!..நன்றி!..

      நீக்கு
  5. வேதாரண்யம் கோவிலின் தல புராணத்தில்
    இந்த ஒரு நிகழ்வு இடம் பெற்றிருக்கிறதா ?
    பல முறை இக்கோவிலுக்கு நான் சென்று இந்தாலும்
    இன்று தான் இதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
    ஆம்.
    நான் முதல் முதலாக படிக்கிறேன்.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பர் சுவாமிகளின் தேவாரமே - ஆதாரம். நான்காம் திருமுறையில் நாற்பத்தொன்பதாவது திருப்பதிகத்தில் திருப்பாடல் எண் எட்டு - இதுவே தலவரலாற்றிற்கு வழிக்குறிப்பு.

      நமது சிந்தனைக்கு அடித்தளம் - தேவாரமும் திருவாசகமும்.

      ஐயா!.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. நாமும் சிந்தையில் செருக்கு நீங்கியவராக - அன்பெனும் நீர் வார்த்து ஐயனின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொள்வோம்!..

    ஓங்கிஉலகளந்த உத்தமன் பேர் பாடி
    திருவோணக்கொண்டாட்டங்களின்
    மூலக்கதையை அருமையாக உணர்த்திய
    பதிவுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  7. அருமையான கதை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். படங்களும் அழகு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..