நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 09, 2013

கனம்தரும் பூங்குழலாள்

திருக்கடவூர். தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிப்பாக்கும் திருத்தலம்.


மேற்கு நோக்கிய திருக்கோயில். முன்னமே கூறியபடி வினைப்பயனின் வேரறுக்கும் திருத்தலம்.  பிரதான சாலையிலிருந்து சற்று தூரத்திற்கு நீண்ட சாலை. செல்லும் வழியிலேயே வடக்கு நோக்கிய காவல் தெய்வமாக ஸ்ரீ காளியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அவளை வணங்கிக் கொள்வோம்!..  

ஐந்து நிமிட நடை தூரம். அம்மையப்பனின் திருக்கோலங்கள் அமைக்கப்பட்டு எழிலாகத் திகழும் அலங்கார தோரணவாயில் நம்மை வரவேற்க, திருக்கோபுரத்தின் தென்புறம் -

திருக்கடவூர்

திருக்கோயிலின் காவல்நாயகமாகிய -ஸ்ரீமுனீஸ்வரன் சந்நிதி.  மாடத்தில் திருநீறு மணக்கின்றது. ஸ்ரீ முனீஸ்வரனை வணங்கி விட்டு விபூதி தரித்துக் கொள்கின்றோம்!.. திருவிழாக் காலங்களில் இவருக்கே முதல் மரியாதை!..  

ஆலயத்தினுள் அம்மையப்பனின் நினைவுகளோடு நுழைகின்றோம். நீண்ட முன்வெளி. இரண்டாவது திருக்கோபுரத்திற்கு முன்பாக தென்புறத்தில் கிழக்கு நோக்கியவளாக - அபிராமவல்லி. அம்பிகை இங்கே தனிக்கோயில் கொண்டு திகழ்கின்றனள்.


அதிகார நந்தி - தன் தேவி சுயம்பிரகாஷினியுடன் சேவை சாதிக்கின்றார். அடுத்து கொடி மரம். பலிபீடம்.

தலை வணங்கி - சந்நிதியைத் தேடி நடந்து வலப்புறம் கள்ள வாரணர் ஆகிய கணபதியைக் கைதொழுது வணங்க - அவர் கைகாட்டும் திசையில் அமிர்த லிங்கம் - எனத் திகழும் அமிர்தகடேஸ்வரர் சந்நிதி. 

பக்தி மணம் கமழும் மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய எம்பெருமான் ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி - அன்னை பாலாம்பிகையுடன். அன்னையின் இருபுறமும் அலைமகளும் கலைமகளும் விளங்குகின்றனர். ஐயனின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் யமன். 

கற்பூர ஆரத்தியின் போது சில நொடிகள் தரிசிக்கலாம். எவ்வளவு கூட்டம்  இருந்தாலும் நிச்சயமாக எல்லாருக்கும் நிம்மதியான தரிசனம் கிடைக்கும். யாரையும் ஏமாற்றத்துடன் அனுப்புவதேயில்லை. மனநிறைவாக அர்ச்சனை செய்த பின் கையில் கிடைக்கும் விபூதியினை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது வழித்துணை நலம் காக்கும்!.. 

ஐயனின் வலப்புறத்தில் பக்த மார்க்கண்டேயர். ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தியின் திருக்கோலத்தினைத் தரிசித்தபடி - திருச்சுற்று மாளிகையில் - மீண்டெழுந்த யமதர்மராஜன். ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தியை வணங்கி,  தலை நிமிர்ந்தால் -

கண்ணெதிரில் அமிர்தகடேஸ்வரர். தோரண விளக்குகள் ஒளிர்கின்றன. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி - தொழுது வணங்க - தொல்வினைகள் எல்லாம் தொலைகின்றன. துரத்தி வரும் வெம்பிணிகள் எல்லாம் தூரத்தே சென்று அழிகின்றன.

உருகாத உள்ளமும் உருகும்!. அன்பினால் பக்தி எனும் வெள்ளமும் பெருகும்!. ஐயனின் சந்நிதியில் வேண்டிக் கொள்ள என்று எதுவுமே தோன்றாது!..

மார்க்கண்டேயர்  - கட்டித் தழுவிக்கொண்ட லிங்கம் அல்லவா!.. கசிந்துருகிக் காணக் காண - பரவசத்துடன் பார்க்கப் பார்க்க - நமக்குப் பசி தீர்கின்றது!..

கண் கொண்ட பயனை அனுபவிக்கின்றோம்!...

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் 
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல!..

''..நம்முடைய கண்ணுக்குக் கண்ணான - கண்ணினை உளம் உவந்து நோக்கி - நெகிழும் போது,  வாய்ச்சொற்களுக்கு வேலையும் இருக்குமா!.. ''

அமிர்தகடேஸ்வரரின் அமிர்த கலைகள்  - நம்மை ஆட்கொள்கின்றன!..

அன்று பிறந்த மழலையென மனம் துள்ளுகின்றது!..

thirukkadaiyur
மேலை வானில் ஆதவன்
திருக்கடவூர்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் மூலஸ்தானம்
அகமும் முகமும் மலர ஐயனைத் தரிசித்தபடி திருச்சுற்றில் வலம் வருகின்றோம். அருள் இளங் குமரனின் சந்நிதி. சித்சபையில் நடமாடும் ஆனந்தக் கூத்தன். கண்குளிரக் கண்டு கை கூப்புகின்றோம். 

சண்டேசர், மகிஷாசுரமர்த்தனி - சனகாதி முனிவர்கள் புடை சூழ வீற்றிருக்கும் எழிலான தக்ஷிணாமூர்த்தி. ''..ஞானம் அருள்க!..'' - என வணங்குகின்றோம்.

திருச்சுற்றில் - நவக்கிரக பிரதிஷ்டை இல்லை எனக் கண்டோம். ஆதியில், மார்க்கண்டேயர் - சிவபூஜை நிகழ்த்தியபோது கமண்டலத்தில் கங்கை நீருடன் தவழ்ந்து வந்த ஜாதி மல்லிகை - திருச்சுற்றின் தென்புறத்தில் பச்சைப் பசேலென படர்ந்திருக்கின்றது. இதுவே தலவிருட்சம்.(ஆதியில் - வில்வம்)

திருச்சுற்று மாளிகையில் ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தியை நோக்கியவாறு யம தர்மனின் சந்நிதி. இங்கே நிகழ்த்தப்படும் கற்பூர ஆரத்தி - அன்பர்களுக்கு வழங்கப்படுவதில்லை.''.. இனி எந்த ஒரு பிழையும் செய்யாதிருக்கும் மனோ திடத்தை அருள்வாய்!..'' - என யமதர்மராஜனுக்கும் பணிவான  வணக்கம்.

சிவ சிந்தனையுடன் திருச்சுற்றினை நிறைவு செய்து - அபிராமவல்லியின் அருள் முகங்காண விழைகின்றோம்!.. இரண்டாவது கோபுரத்தைக் கடந்து வெளியே வந்து அன்னையின் சந்நிதியில் நுழைகின்றோம்!..

வார் சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை, அந்தரி நீலி அழியாத கன்னிகை, புவி ஏழையும் பூத்தவள், செங்கண் திருமால் தங்கச்சி, அன்பர்க்கு கனம்தரும் பூங்குழலாள், ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்த முக்கண்ணி - அபிராமவல்லி,

அமுதவல்லியாய் - ஆனந்தவல்லியாய் - வீற்றிருக்கின்றாள்..


தாய் மடியைத் தேடி - ஓடும் கன்றைப் போல,  நம் மனம் அவளிடம் பாய்ந்து ஓடுகின்றது. அவள் வாஞ்சையுடன் வாரியணைத்துக் கொள்கின்றாள்.. 

''.. அப்படியே.. அப்படியே - அவள் அணைப்பிலேயே - யுக யுகாந்திரத்திற்கும் இருந்து விட மாட்டோமா!.. ''-என மனம் ஏங்குகின்றது!..

''.. நெஞ்சத்து அழுக்கையெல்லாம் துடைத்தனை!. - சுந்தரி!.. நின் அருள் ஏதென்று சொல்லுவதே!.. '' - என மனம் விம்முகின்றது!..

அவளுடைய திருக்கரங்களில் - பச்சிளங்குழந்தையாக நாம் கிடப்பதை நம்மால் காண முடிகின்றது!.. 

தாளாத பாசத்துடன் தலையைக் கோதி விடுகின்றாள்!.. ''எங்கு சென்று  புரண்டாய்!..'' - என்றபடி புழுதியை ஊதி விடுகின்றாள்!.. மிச்சம் மீதியிருக்கும் வினைப் பகையை அன்பெனும் கணையால் சுடுகின்றாள்!.. புறம் திருத்தி, அகம் திருத்தி -  ஆதுரத்துடன்  குங்குமம் இடுகின்றாள்!..

அதற்குமேல் - அதற்குமேல் ..... தாளமுடியவில்லை!.. அங்கிருந்த தூணில் அப்படியே - சாய்ந்து கொள்கின்றோம்!..

நினைவுலகிற்கு மீண்டு வர - சில நிமிடங்களாகின்றன!...

அரும்பித் ததும்பிய ஆனந்தத்துடன் - அன்னையை வலம் வருகின்றோம்.

திருச்சுற்றில் அபிராமி பட்டரின் திருமேனி விளங்குகின்றது. அன்னையின் மெய்யடியாராகிய அந்தப் பெருமகனைப் போற்றி வணங்குகின்றோம்!..

அன்னையின் சந்நிதியில் - கொடிமரத்தினருகில் வீழ்ந்து வணங்கி விட்டு -  சந்நிதியை மீண்டும் நோக்குகின்றோம்!.. கற்பூரஜோதியில் அன்னையின் கடைக்கண்கள் மின்னுகின்றன!..

உள்ளமும் உணர்வும் அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்க - ''..மீண்டும் உன்னை வந்து சந்திக்க வரம் கொடு தாயே!..''  - மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கின்றோம்.


17-2-2012 அன்று எடுக்கப்பட்ட படம்
வெளி நடையில், ''குறுகுறு..'' என யானை - அபிராமி என்றே பெயர் - கழுத்து மணி கலகலக்க அசைந்து கொண்டிருந்தது!.. குறும்பு நிறைந்த அதன் பார்வையே கொள்ளை அழகு!.


எல்லோருக்கும் விருப்பமான யானை எதிர்பாராத உடல் நலக்குறைவினால் கடந்த 2013 ஜனவரி 25 அன்று சிவகதி அடைந்துவிட்டது. அதன் ஆன்மா அன்னையின் திருவடிகளில் நிலைத்திருக்கும்!..

திருக்கோயிலின் கீழ்புறம் அமிர்த தீர்த்தம். நான்முகன், மஹாவிஷ்ணு, நவ கன்னியருடன்  வாசுகி, அகத்தியர் - ஆகியோர் வணங்கிய திருத்தலம்.

பெருமானுக்குரிய அபிஷேக தீர்த்தம் அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் எனும் தலத்திலிருந்து  கொணரப்படுகின்றது. சித்திரையில் பெருந்திருவிழா. கார்த்திகை மாத - சோமவாரத்தில் ஆயிரத்தெட்டு சங்குகளால் மிகச் சிறப்பாக அபிஷேகம் நிகழும்.

காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும், அபிராமி பட்டரும் வாழ்ந்த திருத்தலம்.

அமிர்தகடேசரைத் தரிசித்து - திருப்பதிகம் பாடித் துதித்த - அப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும் குங்கிலியக்கலய நாயனார் உபசரிப்பில் இங்கே தங்கியிருந்த வரலாற்றினை அறியமுடிகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்தினைப் பாடிப் பரவியுள்ளார்.

அருணகிரிநாதர்  திருப்புகழில்  -  ''..யமனை உதைத்த பார்வதி தேவியார்க்கு இனியவளாகிய  - மான் மகள் - வள்ளி நாயகியின் தலைவனே!.. திருக்கடவூர் வீற்றிருக்கும் பெருமாளே!..''   - என்றும்,

''..யமனுடன் எருமையும் - பூமியின் மேல் விழுந்து அழியும்படி உதைத்துக் கிடத்திய - காலகாலனாகிய சிவபிரானின் இடப்பாகத்தில் மருவிய அம்பிகை அருளிய பாலனே, கான மயில் மீது வீற்றிருக்கும் பெருமாளே!.. - என்றும் பாடித் துதிக்கின்றார்.

தேவியருடன் ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள்
தல வரலாற்றுடன் - ஒட்டி உறவாடும் பெருமான் -  ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீஅமிர்த நாராயணப்பெருமாள். மிகச் சிறப்பாகத் திகழ்ந்த பெருமாள் கோயில் - காலவெள்ளத்தின் தாக்குதலினால் பழுதுபட்டு நிற்கின்றது.

நாம் திருக்கடவூர் சென்றிருந்தபோது - ஸ்ரீஅமிர்த நாராயணப்பெருமாளைத் தரிசிக்க இயலாதபடி, இரவாகி விட்டது. இணைய தளத்தில் தேடி எடுக்கப்பட்ட படங்கள் - உங்கள் பார்வைக்கு...


''..செங்கல்கோயில் சிதைந்தால் என்ன!. உங்கள் இதயத்தில் ஓர் இடம்  போதும்!..''  - என்று சொல்லாமல் சொல்கின்றாரா.. பெருமாள்?.. நல்ல உள்ளம் படைத்த அன்பர்களால் திருப்பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள்..

பெருமாள் - தம் திருக்கோயிற் திருப்பணியில் நம்மையும் ஆட்கொள்வாராக!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி 
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடை மேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. (4)

ஸ்ரீ அமிர்தகடேஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ அபிராமவல்லி அம்பிகையும் 
ஸ்ரீ அமிர்த நாராயணப் பெருமாளும் 
அன்பர் தம் குறை தீர்த்து அருள வேண்டும்!.
அவனியும் அல்லல் எல்லாம் தீர்ந்து வாழ வேண்டும்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

4 கருத்துகள்:

  1. படங்களுடன் விளக்கங்கள் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

      நீக்கு
  2. அன்புக்குரிய வேணுகோபால் அவர்களையும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களையும் வருக.. வருக.. என்று வரவேற்கின்றேன்!...

    பதிலளிநீக்கு
  3. திரு. பரமசிவம் நடராஜன் அவர்களை வருக..வருக..என்று வரவேற்கின்றேன்!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..