நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 19, 2013

வைத்தீஸ்வரன் கோயில்

இத்திருத்தலத்தின் தொன்மைத் திருப்பெயர் - புள்ளிருக்குவேளூர்.


புள் என்றால் பறவை - இங்கே குறிக்கப்படுபவர்கள் சூரியனின் தேர்ச்சாரதி என விளங்கும் அருணனின் புதல்வர்களான சம்பாதியும், ஜடாயுவும்,

சாதாரண பறவைகளாகப் பிறந்தோம்!... வானில் வட்டமிட்டுத் திரிந்தோம்!.. கிடைத்ததை உண்டு பசியாறி வளர்ந்தோம்!... கூட்டைக் கட்டி குடும்பத்தை வளர்த்தோம்!... - என்றில்லாமல், 


யோசனை தூரம் சென்று ஆங்கொரு பூவனம் அமைத்து அங்கிருந்து நறுமணம் மிக்க பூக்களைக் கொணர்ந்து, தூய வெண்மணலைத் திரட்டி சிவலிங்கமாக அமைத்து வேத மந்திரம் சொல்லி உயர்ந்த ஞானத்தால் வழிபாடு செய்தனர் - எனில்,  அந்தப் பறவைகளை என்ன என்று சொல்வது!.

நெறிமுறைகளை  தலைமேற்கொண்டு - சம்பாதியும் ஜடாயுவும் செய்த சிவபூஜையின் பயனாகத்தான் மிக மேன்மையான, அதி உன்னதமான புகழ் எய்தும்படிக்கு பெரும் பாக்கியம் வந்து சேர்ந்தது.

எல்லா உயிர்களும் ஈசனை வழிபாடு செய்ததாக புராணங்கள் வாயிலாகவும் மற்ற வரலாறுகள் மூலமாக தெரிந்து கொள்கின்றோம். உதாரணத்திற்கு -

திருக்காளத்தியில் - நாகம் , சிலந்தியுடன் யானையும், திரு ஆனைக்காவில் -  யானையுடன் சிலந்தியும்,

திருநாகேஸ்வரத்தில் நாகமும், திருஎறும்பூரில் எறும்புகளும், திருந்து தேவன் குடியில் நண்டும்,  திருவலிவலத்தில் வலியன் எனும் கரிக் குருவியும்,


திருக்குரங்காடுதுறையில் குரங்கும், திருநாரையூரில் நாரையும், தஞ்சையை அடுத்துள்ள பசுபதி கோயிலில் தேனீக்களும் - என பல உதாரணங்களைச் சொல்லலாம்.

பசுக்கள் பாலைப் பொழிந்து வழிபட்டதாக பற்பல திருக்கோயிலுக்குத் தல புராணங்கள் உள்ளன.

எனினும் -  அநீதியை எதிர்த்துப் போராடி - சத்தியம் வாழ்வதற்கு தன்னுயிரைத் தந்தவன் - ஜடாயு மட்டுமே!...


அதனால் தானே - ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி, குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவை வாரியணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார்.

இன்னுயிர் நீத்த ஜடாயுவை - தன் தந்தையாகப் பாவித்து கிரியைகளைச் செய்தார்.

அத்தகைய தன்மையினால் தான், ஞானசம்பந்தப்பெருமான் - புள் எனப்பட்ட ஜடாயுவையும் சம்பாதியையும் ஒரு பதிகம் முழுதும் புகழ்ந்து பாடினார்.

திருத்தலத்தின் திருப்பெயரும் - புள்ளிருக்கு வேளூர் என்றாயிற்று.

ஜடாயு - தான் செய்த சிவபூஜையை அறமாகச்  செய்தான்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை...

அறம் எனில்  -  தெய்வ வழிபாடு செய்தல். 

தெய்வ வழிபாடு செய்வோர் சகல உயிர்களையும் இயன்றவரை பாதுகாக்கக் கடமைப்பட்டவர்களாக ஆகின்றனர்.

அப்படி ஆகிய நிலையில்  -

இன்சொல் பேசினாலே - இறைவர்க்கு நாளும் பூவுடனும் நீருடனும் பூஜை செய்யும் நிலையினை விட உயர்ந்த நிலையை அடையலாம் என்பது திருமூலரின் திருவாக்கு.

இந்த நிலையினை எய்தினோர்க்கு -
தெய்வமே நேரில் வந்து பிரசாதிக்கும் 

எனில் - 
நன்று உணர்ந்தார்க்கு அறம் செய்ய - கசக்குமா என்ன?...


இனி - புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீஸ்வரன் கோயிலை நோக்கிப் பயணிப்போம்!...

''சிவாய திருச்சிற்றம்பலம்!...''

5 கருத்துகள்:

  1. புள்ளிருக்குவேளூர் - விளக்கமும், ஜடாயுவின் சிறப்பும், அறத்தை அன்றே செய்ய வேண்டும் எனும் குறளும் அருமை... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பரே!...தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!....

    பதிலளிநீக்கு
  3. நிலா மகள் அவர்களை வருக!.. வருக!.. என அன்புடன் வரவேற்கின்றேன்!... தங்களின் இனிய கருத்துக்களை - எதிர்பார்க்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  4. வாரந்தோறும் ஒரு புண்ணியத் தலத்திற்குப் பயணிக்கின்றோம், தங்களால். நன்றிஅய்யா

    பதிலளிநீக்கு
  5. அவன் அருளால் அவன் தாள் வணங்குகின்றோம்!... பயணத்தில் ஒருவருக்கு ஒருவர் வழித்துணை!... தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றேன்!... மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..