நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 06, 2013

மந்திரமாவது நீறு!.

சிவராத்திரி நெருங்கி வரும் வேளையில்
'' சிவாய நம '' என்று சிந்தித்திருக்க...

madurai
அருள்மிகு சுந்தரேசர், மதுரை.
திருஞானசம்பந்தப்பெருமான் அருளிய தேவாரம்
இரண்டாம் திருமுறை,  திருப்பதிக எண் - 66.
தலம் - திருஆலவாய் 
நான்மாடக்கூடல் எனப்படும் மதுரையம்பதி.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. - 1

வேதத்தில் உள்ளது நீறு வெந்துடர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு
சீதப்புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. - 2

முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. - 3

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. - 4

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே. - 5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. - 6

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆலவாயான் திருநீறே. - 7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அராவணங்குந் திருமேனி ஆலவாயான் திருநீறே. - 8

மாலொடு அயன் அறியாத வண்ணமுமுள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏலஉடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே. - 9

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்திகைப்பிப்பது நீறு கருத இனியதுநீறு
எண்திசைப்பட்ட பொருளார்  ஏத்துந் தகையதுநீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே. - 10

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன்உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. - 11

தென்னாடுடைய சிவனே போற்றி!...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!...

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..