நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 02, 2013

ஐந்துகரத்து ஆனை



உம்பர்தரு தேனுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலில் தேனமுதத் ...... துணர்வூறி
இன்ப ரசத்தே பருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பி தனக்காக வனத் ...... தணைவோனே
     தந்தை வலத்தால் அருள்கைக் ...... கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் ...... பொருளோனே
     ஐந்து கரத்தானைமுகப் ...... பெருமாளே!....
(அருணகிரிநாதர்)

வேண்டிக் கேட்பவர்க்கு, வேண்டியதெல்லாம் வழங்கியருளும் கற்பக மரம், நெஞ்சில் நிறுத்தி நினைத்ததை - பொழிந்தருளும் காமதேனு, வேண்டிக் கேட்காமலும் நினைத்து ஒன்றினை நாடாமலும் ''...சிவமே!...'' என்று  சிந்தித்து இருக்கின்ற அடியார் தம் தேவைகளை அவ்வப்போது ஈந்தருளும் சிந்தாமணி - 

இவைகளுக்கு மேலாகத் திகழும் உன்னுடைய -

நினைவினால் நெகிழ்ந்த என் உள்ளத்தில்,

திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தினைப் போல் பொங்கிப் பெருகிய - இனிமை நிறைந்த ஆனந்தச் சாற்றினை -   

நான் பன்னெடுங்காலம் அருந்தி மகிழ்வெய்தும்படிக்கு என்னுயிருக்கு ஆதரவாக நின்று என்மீது அருள் மழை பொழிவாயாக!...

தம்பியின் பொருட்டு - தினைப் புனத்தினைச் சேர்ந்து - இளங்குமரனின் மனம் நாடியபடி குறமகளாகிய வள்ளிநாயகியை மணமுடித்து வைத்த கற்பகக் களிறே!... 

வலஞ்செய்து வணங்கியதற்காக, சிவபெருமான் வழங்கிய அருள்ஞானக் கனியினை ஏந்தியபடி அன்பருக்குத் திருக்கோலங் காட்டியருளும் ஐயனே!... 

''...நீயே அடைக்கலம்...'' எனச் சரணடைந்த அடியார் தமக்கு வேண்டிய எல்லாமுமாகி - அவர் முன் நிலைத்த பொருளாக விளங்கும் நின்மலனே!... 

வாரி வழங்கும் ஐந்து திருக்கரங்களுடன் ஞான வடிவாகிய யானை முகமுங் கொண்டு - விளங்கும் எங்கள் பெருமானே!...

உன் திருவடித் தாமரைகளில் - தலை வைத்து வணங்குகின்றேன்!...

*  *  * 

இது நமது தளத்தின் நூறாவது பதிவு!...

நானிலம் முழுவதும் நல்லுறவுகள்!... மனம் நெகிழ்கின்றது!...

இதுவரையிலும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை...

கற்றதையும் கேட்டதையும் தான் வழங்கி வந்துள்ளேன். 

குற்றங்கள் பல இருக்கக்கூடும்.. அவற்றினை உணர்த்துக!... நல்ல செய்திகளைக் கண்ணுறும்போது அன்பு கூர்ந்து பிறருடன் பகிர்ந்து கொள்க!..

தொகுப்பில் இணைக்கப்பட்ட பல சித்திரங்களை நிலை நிறுத்தியவர்களுக்கு நன்றிகள்!... 

Thanks to

'' நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!...'' - என்பது நமது கோட்பாடு.
வழித்துணையாய் வரும் தமிழ்  -  எல்லாரையும் வாழ வைப்பதாக!...



தஞ்சையம்பதியில்  என்றென்றும் ஆனந்தத் தென்றல் தவழ்வதாக!..
அன்பின் நெஞ்சங்களுக்கு பணிவான நன்றியும் வணக்கமும்!..

வாழ்க வளமுடன்!..
* * * 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..