நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 21, 2013

திருப்பதிகம் - 04

ஓம் நமசிவாய!..


திருத்தலம்
திருஅண்ணாமலை 

இறைவன்  - ஸ்ரீஅண்ணாமலையார்
அம்பிகை - ஸ்ரீஉண்ணாமுலையாள்
தலவிருட்சம் - மகிழ மரம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் 

-: தலப்பெருமை :-

நினைக்க முக்தி தரும் திருத்தலம் - அண்ணாமலை.

பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் தம்முள் யார் பெரியவர் என தர்க்கம் செய்து நின்றபோது அவர்கள் நடுவில் ஈசன் அனல் உருவாக மூண்டெழுந்தான். 

அப்போது அந்த ஜோதியின் முடியினைக் காண்பதற்கு அன்ன வடிவாக பிரம்மனும் அடியினைக் காண்பதற்கு வராக வடிவாக ஹரியும் தேடித் திரிந்த திருத்தலம். 

அவர்கள் அறியும் பொருட்டே - அடிமுடி அறிய முடியாதபடி லிங்கோத்பவராக ஈசன் தோன்றியருளினன். 

இறைவன் மலை வடிவாக விளங்கும் திருத்தலம்.


திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
முதல் திருமுறை - திருப்பதிக எண் - 10

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.  

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.


கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.


ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.


விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.


வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.


வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
 
 
   
திருச்சிற்றம்பலம்
* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..