நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

மாசி மகம் - 01

பௌர்ணமி எனும் முழுமதி  நாள், இந்துக்களின் வாழ்வில் ஒரு முக்கியத் திருநாளாக மாதந்தோறும் கொண்டாடப்படுகின்றது. 

சித்திரை முதல் பங்குனி வரையில் பௌர்ணமி நாளும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும் இணைந்து  பன்னிரண்டு விசேஷ நாட்களாக அமைந்துள்ளன.  இந்த நாட்களைத் திருக்கோயில்களில் விழாக்களாகச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மாசி முழுமதி நாளில் மக நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா  மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது.

சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலான நாட்கள் முருகனுக்குரிய சிறப்பான திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தட்சனின்  சாபத்தால் சந்திரனின் கலைகள் தேய்வுற்றன. இதனால் அழகிழந்த சந்திரன் சிவபெருமானிடம் அடைக்கலமானான். தேய்வுற்ற சந்திர கலையினைத் தன் தலையில் சூடி - சந்திரன் தேய்வதிலிருந்து காத்தருளினார். சிவபெருமானுக்கு - "சந்திரசேகரர்'' என்ற திருப்பெயரும் அமைந்தது.

சந்திரனே நமது மூளையையும் மனதையும் ஆட்சி செய்பவன். இதனாலேயே சந்திரன் "மதி''  எனப்படுகின்றான்

"முழுமதி நாளில் நமது மூளையின் இயக்கம் பூரண நிலையில் இருப்பதால் அன்றைய தினம் சந்திரனைப் போல சிவபெருமானை வழிபாடு செய்து  திருவருள் பெறலாம்...'' என்பதே இதன் அடிப்படை

மாசிமாத மகநட்சத்திர நன்னாளில் - திருத்தலங்களில், நீராடல் நிகழ்வதை திருஞானசம்பந்தர், தேவாரத்தில்  திருமயிலை - கபாலீச்சரத் திருப்பதிகத்தில் பாடியருளியுள்ளார்.


திருமயிலையில் சிவனடியாரான சிவநேசன் எனும் பெருவணிகரின் அன்பு மகள் பூம்பாவை நந்தவனத்தில் அரவு தீண்டி மாண்டு விடுகின்றாள். இவள் திருஞானசம்பந்தருக்கு மணம் முடித்துக் கொடுப்பது  என்று நிச்சயித்திருந்த சிவநேசப் பெருந்தகை நடந்ததை எண்ணி மனம் வருந்தினாலும்  எல்லாம் ஈசன் செயல் என -  திருஞானசம்பந்தப் பெருமானின் வரவை எதிர்நோக்கிக் கபாலீச்சரத்தில் கன்னி மாடத்தில்  - அப்பெண்ணின் அஸ்திக் கலசத்தைப் பாதுகாத்து வருகிறார்.

பின்னொரு நாளில் திருமயிலைக்கு வருகை தந்த சம்பந்தமூர்த்தி - இந்த விவரத்தினை  அறிந்து மனம் நெகிழ்ந்தார். 

பூம்பாவை உயிர் பெற்று எழ வேண்டி திருமயிலைக் கபாலீச்சரம் அமர்ந்த பெருமானிடம் முறையிட்டார். 

''மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம்  அமர்ந்தான்
அடலானேறு  ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்...'' (2/47/6)

''பூம்பாவையே!... நிறைந்த மடல்களுடன் கூடிய செழுமையான தென்னை மரங்கள் மிகுந்து விளங்கும் மயிலையில், கபாலீச்சரம் என்னும் திருப் பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை நிறைந்த காளையின் மீது ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன்  - புகழ் மிக்க மாசிமக நாளில் கடலாட்டு கொள்வதையும்,  எம்பெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையும் கண்டு இன்புற்று அவனடி பரவிப் போற்றுதற்கு (மீண்டெழுந்து) வருவாயாக!..''

- என்று  திருப்பதிகம் பாடியருளினார். திருப்பதிகம் பாடுங்கால்,

மயிலை மாசிமக கடலாட்டுப் பெருவிழாவினையும் மற்ற திருநாட்களையும் சிறப்பித்துப் பாடினார் சம்பந்தர்.

திருப்பதிகத்தின் நிறைவில் உயிர்த்தெழுந்த பூம்பாவையைத் தன் மகளாக வாழ்த்தியருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.


கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் மக்களின் பாவங்களைச் சுமக்கும் புண்ணியநதிகள் நீராடி - தங்கள் பாவங்களைத் தீர்த்துக்கொள்வதாக ஐதீகம். மகாமகக் குளத்தில் -  பித்ரு கடன் தீர்க்க எள்ளும் நீரும் வழங்குவதை மாசி மகத்தன்று  காணலாம்.

கும்பகோணத்தில் உள்ள சைவ - வைணவ ஆலயங்களிலிருந்து உற்சவத் திருமேனிகள் வீதியுலா எழுந்தருளி மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நிகழும்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்செந்தூர், திருமறைக்காடு, நாகப்பட்டினம் - ஆகிய தலங்களிலும்  மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. 

இறைவனுக்கு மாசிமக விழாவில் "பெருந்திருஅமுது' செய்ய நிலம் அளித்த செய்திகள்  ராஜராஜசோழ மாமன்னனின் கல்வெட்டுகளில்  காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் தமக்கும் தமது சந்ததியருக்கும் - நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. 

திருச்சிற்றம்பலம்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..