நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 18, 2012

திருப்பாவை - 03


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 03

வாமனன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!...

எம் தோழியரே!...உணர்ந்து கொள்வீர்!.....உண்மையைப் புரிந்து கொள்வீர்!....

அன்று மாவலி செய்த யாகத்தில் பால்மணம் மாறாத பாலகனாக - வாமன வடிவினனாக - வந்து, 

மூன்றடி தானம் கேட்டு வாங்கி - ஓங்கி வளர்ந்து ஓரடியால் மூவுலகங்களையும் அளந்த அந்த உத்தமனின் பெயரைப் பாடி ஆடி - நாம் பாவை நோன்பு நோற்பதனால் - 

(அங்கு இங்கு என்றில்லாமல்) நாடு முழுவதும் (விளை நிலங்கள், பயிர்கள், கால்நடைகள், மனிதர்கள் - என எதற்கும் எவர்க்கும்) எவ்வித தீங்கும் இன்றி, பருவம் தவறாது பெய்ய வேண்டிய காலத்தில் மும்முறை மழை பொழியும். 

அதனால் மண் வளம் மிக்குற்று வயற்காடுகளில் செந்நெற் பயிர்கள் அடர்த்தியான கதிர்களுடன் ஓங்கி வளர - 

நீர் நிறைந்து ததும்பும் வயல்களினூடே பருத்த மீன்கள் கூட்டங்கூட்டமாக நீந்தி உழற்றித் திரிய, 
பொறி வண்டு கண் படுக்கும் நீரோடைப் பூக்கள்
வயல் வரப்புகளின் ஓரமாக சலசலக்கும் நீரோடையினை மூடி மறைத்துப் பூத்துக் கிடக்கும் குவளைப் பூக்களுக்குள் - தேன் சுவைக்க வந்த வண்டுகள், தேனைச் சுவைத்த பின்னும் எழ மனமின்றி - இன்புற்றுக் கிடக்குமே!...அது மட்டுமா!... 

வாழும்நாள் எல்லாம் வாழ்வது - மாரி போல வாரி வாரிக் கொடுப்பதற்கே என்று வாழ்பவர் மகோன்னதர்கள். அவர்களைப் போலத்தான் நாங்களும் என்பதைப் போல,

பால் கறக்க வேண்டி ஒரு குடத்துடன் அமர்ந்து, பால் நிறைந்து பெருத்த மடியில் - ஒரு காம்பினைப் பற்ற - ஒரு துளியையும் கரவாது - (கறப்பதற்கு வேலையின்றி) அப்படியே பாலைப் பொழிந்து குடத்தை நிறைத்து விடும் குணமுடைய வள்ளல் பெரும் பசுக்களால் - 
வள்ளல் பெரும் பசு
( நம்மை விட்டு என்றும் ) நீங்காத செல்வம் குறைவின்றி நிறையுமே!....

''நீர்வளமும் நிலவளமும் பல்கிப் பெருகி மனைவளம் 
என்றும் குன்றாமல் குவியுமே!...''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..