நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


சனி, ஏப்ரல் 22, 2017

அருட்தொண்டர்

காஞ்சி மாநகரில் இன்னும் பரபரப்பு அடங்கவில்லை.

மக்கள் அங்கும் இங்குமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

''..சில தினங்களாக காணப்படாமல் இருந்த தருமசேனர் திருவதிகையில் இருக்கின்றாராமே!.. அதுவும் மயானச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் சிவனின் சமயத்தைச் சார்ந்து விட்டாராமே!..''

''..நமக்கெல்லாம் வழிகாட்டி தலைமைப் பீடத்திலிருந்த  அவருக்கு  இப்படி மதி கெட்டுப் போனதேனோ?.. இதில் தீராத சூலை எனும் பொய்ப்பேச்சு வேறு!..''

''..நமது பள்ளியிலும் பாழியிலும் இல்லாத அருமருந்துகளா?.. மணி மந்திர ஔஷதங்களை மீறிய மற்றொன்றினால் நோய் தீர்ந்திடக் கூடுமோ!..''


''..அவருடைய சகோதரியாம்.. திலகவதி..ன்னு பேராம்.. திருவதிகை கோயில்ல அலகிட்டு மெழுக்கிட்டு திருவிளக்கேற்றி பூத்தொடுத்து பணி செய்பவராம்.. அவர் கொடுத்த சாம்பலைப் பூசிக் கொண்டாராம்!..''  

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் 
நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய் 
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே!... 

''..அப்படின்னு வயிற்று வலியோடு பாட்டு பாடினாராம். உடனே சூலை நோய் தீர்ந்து ஒழிந்ததாம்..  உடனே மண்டையோட்டில் பலி ஏற்கும் அந்த மயானக் கூத்தனும் மகிழ்ந்து திருநாவுக்கரசு.. அப்படின்னு பட்டம் கொடுத்தானாம்!..''

''..இந்தக் காலத்தில இதையெல்லாம் நம்ப முடியுமா?.. அதான் நம்ம ஆளுங்க ஓடிப்போன ஆளைத் தேடிப்பிடித்து இன்னிக்கு கொண்டு வர்றாங்க.. மகாராஜா மகேந்திர பல்லவர் நேரடி விசாரணை!..''

''.. இன்னொன்றும் கேள்விப்பட்டேனே.. சேனாதிபதி முதல்ல கூப்பிட்டதும் நாமார்க்கும் குடியல்லோம்!.. நமனை அஞ்சோம்!.. போடா.. உன் வேலையப் போய்ப் பார்!.. அப்படின்னாராமே!.. ஆனாலும் நம்ம ஆளுங்க விடுவாங்களா!.. கட்டி இழுத்துக்கிட்டு வர்றாங்க!..''

இப்படியெல்லாம் - பேசிக் களித்திருந்தனர் - காஞ்சியின் மக்கள். 

ஆனால்,

காஞ்சியின் பெருவீதிகளில் பிதற்றித் திரிந்தவர்கள்
அனைவரும்  வாயடைத்துப் போகும் வண்ணம்
அடுத்தடுத்து அற்புதங்கள் நிகழ்ந்தன.

அதோ - ஆரவாரத்துடன் வந்து கொண்டிருந்தனர் பல்லவனின் படையாட்கள்.

அவர்களுக்கு மத்தியில் திருவதிகையில் பிடிக்கப்பட்ட - திருநாவுக்கரசர்.

''.. சமயம் துறந்து ஓடிய தருமசேனரைத் தண்டித்து ஒறுக்க வேண்டும்!..''

தன் முன் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரை நீற்றறையில் இடுமாறு  உத்தரவிட்டான்.

பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ பற்றற்றோமே!..

- என்று சிவானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திருந்த , திருநாவுக்கரசரை பெருங் களிப்புடன் - சுண்ணாம்பு நீற்றறையில் இருத்தித் தாளிட்டனர்.

ஏழு நாட்கள் கழிந்த நிலையில் - மகிழ்வுடன் நீற்றறையின் தாள் திறந்து நோக்கியவர்கள் மயக்குற்று வீழ்ந்தனர்.

''..இது ஏதோ மாயம்.. இனி நஞ்சு ஊட்டுவோம்!..'' - என முடிவெடுத்து கணக்கிலாதவர் கூடி நின்று , திருநாவுக்கரசருக்கு நஞ்சு கலந்த வஞ்சனைப் பால்சோற்றினை உண்ணக் கொடுத்தனர்.

நஞ்சுடைய கண்டனின் நற்றாள் நீழலில் இன்புற்றிருக்கும் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு நஞ்சும் அமுதமாயிற்று.

''..இதுவும் மாயமே!.. எல்லாம் நம்மிடம் கற்றவை. இனி மண்ணில் ஆழப் புதைத்து மதயானையைக் கொண்டு இடறுவோம்!..'' - எனத் தீர்மானித்தனர்.

அதன்படி கொலைக் களத்தில் குழி வெட்டினர். அது தமக்குத் தானே ஆகப் போகின்றது என்பதை அறியாமல்!..

குழிக்குள் இறக்கப்பட்ட திருநாவுக்கரசரை  இடறுமாறு -  மதயானையை அவிழ்த்து விட்டனர் . ஓடி வந்த மதயானை சுவாமிகளைக் கண்டதும் பெருங் குரலெடுத்துப் பிளிறியது. மும்முறை வலங்செய்து வணங்கியது.

தன்னை ஏவி விட்டவரை எற்றித் தள்ளி மிதித்தவாறு ஓடிப்போனது.

''..மீண்டும் பெரும் மாயமே நிகழ்ந்தது!.  இனி, மீள இயலாத வண்ணம் கருங் கல்லுடன் சேர்த்துப் பிணைத்து பெருங்கடலுள் தள்ளி விடுவோம்.  தப்பிப்பது எங்ஙனம்?.. அதையும் காண்போம்!..'' - என்று ஆர்ப்பரித்தவாறு, அடுத்து ஆக வேண்டியதைக் கவனித்தனர்.

பிழை ஏதும் நேர்ந்து விடாதபடிக்கு பெருங்கவனம் கொண்டு - கருங்கல்லுடன் பிணக்கப்பட்ட  திருநாவுக்கரசர் - திருப்பாதிரிப்புலியூருக்கு அப்பால் - வங்கக் கடலுள் தள்ளப்பட்டார்.

வங்கக் கடலோ - தங்கத் தமிழ் மகனைத் தாங்கிக் கொண்ட மகிழ்வில், தன்னுள் வாங்கிக் கொண்ட மகிழ்வில் - ஆரவாரித்தது.

பெருமானின் திருநாவிலிருந்து நற்றமிழ்ப் பதிகம் மலர்ந்தது.


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே!.

இறுகிய கருங்கல்லும் இளகியது.

அமிழ்தத் தமிழினைக் கேட்டு இன்புற்ற -
அந்தக் கருங்கல் கடலுள் ஆழாமல் மிதந்தது.

''..இப்படி ஆயிற்றே!..'' - எனப் பரிதவித்து  கரையில் நின்று கலங்கிய அன்பர்கள் கண்ணெதிரே நிகழ்ந்த அற்புதங்கண்டு அலைகடலினும் பெரிதாய் ஆரவாரித்தனர்.

திண்ணிய கல் தெப்பமாக மாறியது.  ஆனந்தத் தாலாட்டு இசைத்தவாறே - அலைகடல் - ஐயனைக் கரையில் சேர்த்தது.

''..எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்!..''
- என்று எங்கும் ஆனந்தச் சங்குகள் முழங்கின.

''..பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் - சங்காரம் நிஜம்!..''
- என்று முழங்கிய சங்கொலியினைக் கேட்டு
- செவிப்பறை கிழிந்து போனது சிறு மதியாளருக்கு.

கடலிலிருந்து கரையேறிய திருநாவுக்கரசர் - அடியார் புடைசூழ,
திருப்பாடலீச்சுரம் எனும் திருப்பாதிரிப்புலியூர் திருக்கோயிலின் திருப்படிகளைத் தொட்டு வணங்கியவாறே,

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
மறவாதிருக்க வரந்தர வேண்டும்!..

- என்று பாடிப் பரவினார்.

நிகழ்ந்தவை அனைத்தையும் அறிந்த மகேந்திர பல்லவன் ஓடோடி வந்து உத்தமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கண்ணீரால் கழுவி நின்றான்.

அவனைத் தேற்றி எழுப்பிய திருநாவுக்கரசர் - பஞ்சாட்சரம் ஓதி திருநீறு அளித்தார். அந்த அளவில் மனம் மாறினான் மன்னன் மகேந்திரன்.

பாழிகளில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் மீண்டு வந்தனர் மக்கள். அடைத்துக் கிடந்த ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டன.

அஞ்செழுத்து மந்திரம் - ஆனந்த வானில் எங்கெங்கும் எதிரொலித்தது.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.. (0033)

எனும் திருக்குறளின்படி -
சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்தவர் - திருநாவுக்கரசர்..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

அப்பா!.. - என அழைத்து மகிழ்ந்தார் ஞானசம்பந்தப் பெருமான்..

ஞானசம்பந்தப் பெருமான் அழைத்து மகிழ்ந்ததாலேயே - 
நாவுக்கரசருக்கு - அப்பர் எனும் திருப்பெயர் வழங்கலாயிற்று..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திருவீழிமிழலையில் மக்கள் பஞ்சம் தீர்ப்பதற்கு மாற்றுக் குறையாத பொற்காசு வழங்கினான் - இறைவன்..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திருப்பைஞ்ஞீலியில் - திருநாவுக்கரசருக்கென்று பொதி சோறும் நீரும் தாங்கி வந்து பரிமாறினான் - இறைவன்.. 


சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திருமறைக்காட்டில் - வேதங்களால் அடைக்கப்பட்ட
பெருங்கதவங்களின் திருத்தாழ்கள் திறந்து கொண்டன..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திங்களூரில் - அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரைக் காணாமலேயே - தனது ஞானகுருவாகக் கொண்டார்..

அப்பூதி அடிகளின் மகன் நாகந்தீண்டி இறந்தும் - மீண்டு எழுந்து வந்தனன்..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தன்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனியுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..

- என்று தென் கடம்பூர் திருக்கோயிலில் உரிமையுடன் விண்ணப்பம் செய்து கொள்ள முடிந்தது..


அப்பர் பெருமானின் பெருமை அளவிடற்கரியது..

ஞானசம்பந்தப் பெருமானும் பின்னாளில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகங்கள் பாடியிருந்தாலும்

அவை ஒருசேர - தேவாரம் என வழங்கப்பெறுவது நாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகங்களைக் கொண்டு தான்!..

தேவாரத் திருமுறைகளின்படி திருப்பதிகம் பெற்றதாகக் குறிக்கப்படும் திருத்தலங்கள் - 274..

அவற்றுள் - திருநாவுக்கரசர் தரிசித்த திருத்தலங்கள் - 123..

இத்திருத்தலங்களைப் போற்றி அருளிய திருப்பதிகங்கள் - 312..

மூவருடைய திருவாக்கில் இடம் பெற்றதாகக் கொண்டு
வைப்புத் தலங்கள் எனக் குறிக்கப்படும் திருத்தலங்கள் - 301..

அவற்றுள் திருநாவுக்கரசரால் குறிக்கப்படுபவை - 172..

ராஜராஜ சோழன் தேவாரத்தைத் தேடியலைந்து - 
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறையில் அவற்றைக் கண்டடைந்து -
நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு தொகுத்தபோது -

திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் எனக் கிடைத்தவை - 312..

ஆயினும், அப்பர் பெருமான் அருளியவை நாலாயிரம் திருப்பதிகங்கள் என்று ஒரு சொற்குறிப்பும் உண்டு..

உழவாரப் படை கொண்டு திருப்பணி செய்தவர் அவர்.

புறச்சமயம் சென்று திரும்பியவர். அதனால் விளைந்த இன்னல்களைப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டவர்.

ஆருயிர்களிடத்து அன்பில்லாத ஆன்மீகத்தை - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடித்துரைத்த உத்தமர்.

மக்கட்தொண்டு இயற்றிய புண்ணியர். 
தமது திருவாக்கினால் - மக்களை நெறிப்படுத்தியவர்.

திருக்கயிலாயக் காட்சியினை - திருஐயாற்றில் கண்டவர்.


திருப்பூந்துருத்தி, திருக்கடவூர், திருவீழிமிழலை, திருஆரூர், திருமறைக்காடு - எனும் தலங்களில் ஞானசம்பந்தப்பெருமானுடன் இணைந்து வழிபட்டவர். 

பஞ்சமுற்ற காலத்தில் மக்களின் பசித் துயர் நீக்கியவர்.
மக்கள் பணியே மகேசன் பணி!.. - என்பதை மண்ணுலகிற்கு உணர்த்தியவர்.

அப்பர் ஸ்வாமிகள் - ஈசனுடன்
இரண்டறக் கலந்த நாள் - சித்திரைச் சதயம்...

இன்று சித்திரை சதயம்..
திருப்புகலூரில் ஈசனுடன் கலந்த நாள்.. 

திருப்புகலூரிலும் மற்ற சிவாலயங்களிலும்
திருநாவுக்கரசர் குருபூஜை சிறப்புற நிகழ்கின்றது..

தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில்
மூன்று நாள் வைபவமாக அனுசரிக்கப்படுகின்றது..
***

அத்துடன் வருடந்தோறும் 
ஏப்ரல் 22 ஆகிய இன்றைய நாள் 
உலக நாளாகவும் அனுசரிக்கப்படுகின்றது...அப்பர் பெருமான் இவ்வுலகப் பருப்பொருளினைத் 
தரிசித்து மகிழ்கின்றார் தெரியுமா?..

திருவதிகைத் திருத்தலத்தினில்
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!..
என்று புகழ்ந்துரைக்கும் அப்பர் ஸ்வாமிகள்

தில்லைச் சிற்றம்பலத்தில்
மற்றைக் கரியானை நான்முகனைக் கனலை காற்றைக் 
கனைகடலை குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!..
என்று உருகி நின்று வணங்குகின்றார்..

காணும் அனைத்திலும் 
ஈசன் எம்பெருமானைக் கண்டு கொள்ளுதற்கு
மனம் பழகி விட்டால் - பின் எதற்கும்
தீங்கு செய்ய ஒண்ணாது..

அதுவே இம்மண்ணிற்கு
மனிதர்கள் செய்யும் நன்றிக்கடன்..


அப்பர் பெருமான் - திருப்புகலூர்

அப்பர் பெருமான் காட்டியருளிய வழியில் நின்று 
இயன்ற மட்டும் இயற்கையிடத்து அன்பு காட்டி
சிவநெறி பேணுவோம்..
தவநெறி பூணுவோம்!..

அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *